புறஉலகில் உள்ள பருப்பொருட்கள் உயிரினத்தின் மீது படும்போது அந்த உயிரினம் தனக்குள் இருக்கும் உணர்வை அறிந்துகொள்கிறது. மனித உயிரினத்தின் மீது அந்த பருப்பொருட்கள் படும்போது மனிதனுக்கு உணர்வோடு சேர்ந்து உணர்ச்சிகளும் வெளிப்படும். அந்த வெளிபாட்டை தனது எழுத்துக்களிலும்,பாடல்களிலும்,ஓவியத்திலும், வெளிபடுத்துகிறான். எழுத்துகளில் மனிதன் வெளியிடும் போது அவனை பாதித்த பருப்பொருளை அவனுக்கு பிடித்த கடவுளையோ, அரசனையோ ஒப்பிட்டு வெளிபடுத்துகிறான். ஆதிகால மனிதர்களின் புறபருப்பொருள் பாதிப்பினால் ஏற்பட்ட உணர்வோடு சேர்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடே கடவுள். இந்த பருப்பொருட்கள் நம்மை பாதித்து தாம் எவை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. ஒரு பயணத்தில் என்னை பாதித்த பருப்பொருட்களை பற்றிய எனது உணர்வோடு சேர்ந்த உணர்சிகளின் வெளிப்பாடே இந்த பயணக்கட்டுரை. இனி அதனை பருப்பொருட்கள் என்று அழைக்காமல் மனிதர்கள் வைத்த பெயரோடு பயணத்தை தொடங்குகிறேன்.
நமது உணர்வுகளையும் உணர்சிகளையும் வெளியில் கொண்டுவருவது உலகத்தில் உள்ள பல பருப்பொருட்கள் நம் மீது மோதும் போது தான். அதில் சில நம் மீது மோதும் போது மகிழ்ச்சியான உணர்வுகளையும் உணர்சிகளையும் தரும் அதில் முக்கியமான இரண்டு பருப்பொருட்கள் இயற்கையினால் கிடைக்கும் குளிர்ந்த காற்றும்,நீரும். மழைத்துளி நம் மீது படும்போது ஒரு மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும் அந்த உணர்வை ரசித்து கொண்டு இருக்கும் போது எங்கள் முன் வாகனத்தில் ஹுபர்ட் அய்யா வந்து நின்றார். நானும் மது அண்ணாவும் வாகனத்தில் ஏறினோம் போகும்போது அந்த குளிர்ந்த காற்றும், மழை சாரலும் முகத்தில் முத்தம் கொடுக்க எங்கள் பயணம் தொடர்ந்தது. எங்கு போகிறோம் என்று அவர்களிடம் கேட்ட போது மது அண்ணாவின் கை திரும்பும் திசையில் எனது தலையும் திரும்பியது என் உடல் அந்த இடத்திற்கு சேரும் முன் எனது கண்கள் அந்த இடத்திற்கு போய் சேர்ந்தது ஒரு அழகிய மலை கருமேகங்கள் அதன் தலையில் தலைபாகை கட்டியது போல் இயற்கையின் தோழனாக இருக்கும் விவசாயின் தோற்றம் போல் காட்சியளித்தது. ஒரு கிராமத்தில் எங்களது வாகனம் நின்றது மூவரும் இறங்கி அங்கு இருக்கும் சாமான்ய மக்களின் வாழ்கை முறையை பார்த்துக்கொண்டே ஒரு கடையில் தேனீர் அருந்தினோம். வாகனத்தை நிறுத்த இடம் தேடிக்கொண்டு இருக்கும்போது தனது கடையின் பக்கத்தில் விடுங்கள் என்று அந்த எளிய மனிதரின் சொல் கிராமத்து மக்களுக்கே உள்ள சிறப்பு. சாமான்ய மக்களால் செய்யப்பட்ட சிறிதும் கலப்படம் இல்லாத காலை உணவை முடித்துவிட்டு பயணத்தை தொடங்கினோம் மலையில் ஏறுவதற்கு.
அந்த சிறிய கிராமத்தை கடந்து மலையை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம் மனிதர்களின் சத்தங்கள் குறைந்து பறவைகள் சத்தமும் காற்றின் சத்தமும் கேட்க தொடங்கியது. தனது குடும்பத்துடன் ஒரு விவசாயி வயலில் வேலை செய்ய சென்றுக்கொண்டு இருந்தார் அவரை கடந்து ஒரு மணல் மேடு மீது ஏறினோம் இப்பொது மலை சற்று அருகில் தெரிந்தது ஆனால் அதனிடம் செல்ல இன்னும் நெடும் தொலைவு நடக்கவேண்டும். அந்த மணல் மேடு அருகில் ஒரு சிறிய குளம், மலையில் இருந்து வரும் தண்ணீரை சேர்ந்து வைத்து வயல்களில் பாசனம் செய்ய இந்த குளத்தை உருவாக்கி உள்ளார்கள். அந்த குளத்தை பார்த்துக்கொண்டே பயணம் தொடர்ந்தது.
இப்பொது மலைக்கு செல்லும் பாதைக்குள் நுழைந்தோம் குழந்தைகள் புதிய நபர்களை வெட்கபட்டு சிரிந்து கொண்டே பார்ப்பார்கள் அதுபோல எங்களை மண்ணில் இருந்து புதிதாக முளைத்த வேர்கடலை செடி குழந்தைகள் பல சிரித்துகொண்டே வரவேற்றன அந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருந்தார் அந்த குழந்தைகளை பாதுகாக்கும் தாய்(விவசாயி). அந்த குழந்தைகளை ரசித்துக்கொண்டு சிறிது தூரம் கடந்து போகையில் அவர்களுக்கு அண்ணன்களாக இருக்கும் மாமரம் எங்களை புன்னகையுடன் வரவேற்றது திரும்பிய பக்கம் எல்லாம் மாமரம். அந்த தோப்பிற்குள் ஒரு குடிசைவீட்டில் சற்று ஓய்வு எடுத்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். மூன்று நபர்கள் செல்ல கூடிய பாதை இப்பொது இரண்டு அல்லது ஒருவர் மட்டுமே செல்லும் பாதையாக சுருங்கியது. நேற்று கொட்டிய அடை மழையில் ஈரப்பதம் உடைய மணல்களும்,மழை நீர் பட்டவுடன் தனது பச்சை நிறத்தை எங்களது கண்களுக்கு விருந்து அளிக்கும் செடிகளும், அந்த ஈரப்பதம் உள்ள செடிகளுக்குள் ஊடுருவி வரும் குளிர்ந்த காற்றும், எப்போது வேண்டுமானாலும் மழையை தருவேன் எதற்கும் தயாராக இருங்கள் மக்களே என்று அன்பு கட்டளையிடும் கருமேகங்களும் எங்களது பயணத்தை உற்சாக படுத்தின. அந்த பாதையில் உள்ள மணல்கள் மிகவும் பொடி மணல்கள் ஈரப்பதத்தோடு அருமையாக காட்சி அளித்தது.
மாந்தோப்பை கடந்துவந்த உடன் எங்களை வரவேற்க காத்துகொண்டு இருந்தன தென்னந்தோப்புகள். ஒருபுறம் தென்னை தோப்புகள் மறுபுறம் வயல்வெளிகள் நடுவில் நாங்கள் அந்த இடத்தின் அழகை ரசித்துகொண்டே கடந்து வந்தோம். பயணத்தில் பல மரங்கள் செடிகள் கண்டோம் ந(ர)கர வாழ்கையில் சிக்கிகொண்ட மனிதனும் பல செடிகள் மரங்கள் பெயர்கள் தெரியாது என்பதற்கு ஒரு உதாரணம் நான். பின்பு வரிசையாக பல மரங்கள் அன்போடு எங்களை வரவேற்றன. இப்பொது நாங்கள் இருக்கும் இடம் அடர்ந்த மழைக்காடு. காடுகளை மூன்று விதமாக பிரிப்பார்கள் அதில் முக்கியமான ஒன்று அடர்ந்த மழை காடுகள் அந்த காட்டின் நடுவில் இருப்பது ஒரு அலாதிய மகிழ்ச்சியை தந்தது. மழை காடுகளில் எப்பொதும் மணல்கள் செடிகள் ஈரப்பதம் பொருந்தியே இருக்கும் நேற்று கொட்டிய மழையில் அதன் தன்மை அதிகமாக இருந்து எங்களுக்கு விருந்து அளித்தது. காடுகளுக்குள் தண்ணீர் சத்தம் கேட்டால் நிச்சயமாக பக்கத்தில் ஓடையோ அருவியோ இருக்கும் என்பது புலப்படும். எங்களின் தேடல் தண்ணீர் இருக்கும் திசை நோக்கி இருந்தது. மரங்களுக்கு பக்கத்தில் அழகான சத்தத்துடன் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது செம்மன் நிறத்தில். பல வருடங்கள் கழித்து கொட்டிய மழையால் மணல்கள் அடித்து செல்கின்றது அதான் இந்த நிறம் என்று மது அண்ணா கூறும்போது தான் அதற்கான அர்த்தம் புரிந்தது. அந்த தண்ணீரில் எங்களது கால்களை நனைத்துவிட்டு மலைகளை நோக்கி எங்களது பயணத்தை தொடர்ந்தோம்.
இப்பொது மலைகளில் இருந்து வரும் ஓடையின் வழியாக செல்லவேண்டும் அந்த சுத்தமான தெளிந்த தண்ணீரில் எங்களது கால்களை வைத்தோம் பயணத்தை தொடங்க. குளிர்ந்த சுத்தமான தண்ணீரில் கால்களை வைத்தவுடன் பல விடயங்கள் மனதில் தோன்றியது கழிவு நீராக இருந்தாலும் அதை சுத்தமான நீராக மாற்ற நாங்கள் இருகின்றோம் என்று கூவி கொண்டு இருக்கும் விளம்பரங்களும், குளிர்ந்த காற்றும் நீரும் நமது உடல்மீது படும்போது உணர்வுகளோடு உணர்சிகள் வருவது இயற்கையே நாம் உயிரினம் என்பதை உணர்த்துவது அதுதான். ஒரு குறிபிட்ட இடத்தில் உள்ள தண்ணீர் நமது உடல்மீது பட்டால் நமது “பாவம்” நீங்கும் “புண்ணியம்” பெருகும் என்று மக்களை இந்த இரண்டு வார்த்தைகளில் ஏமாற்றி அடிமை படுத்தி இப்பொது அதை மீண்டும் புண்ணியம் ஆக மாற்றுகிறோம் என்று அரசியல் செய்து கொண்டு இருப்பவர்களையும் நினைத்து கொண்டே மலை ஏறுவதற்கான வழியை அடைந்தோம்.
மலைகளையும் காடுகளையும் கடவுளாக வழிபட்டு அவற்றை தனது குழந்தைகள் போல் பாதுகாத்து கொண்டு இருக்கின்ற பழங்குடி மக்களின் பண்பாடான சிறு கோவில் எங்களை வரவேற்றன. அதனை கடந்து மெதுவாக மலைகளில் ஏறினோம் வழி முழுவதும் கற்கள் துகள்களை கடந்து சிறிது நேரம் ஏறிய பின் திரும்பி பார்த்தேன் பல மலைகளுக்கு நடுவில் நாம் இருக்கிறோம் என்பது உணரமுடிந்தது. கரு மேகங்கள் களைந்து வெண்மேகங்கள் வருகை தந்து சூரியனுக்கு வழிவிட்டது, நீண்ட தூரம் சென்ற பிறகு எங்களுக்கு எதிர்த்திசையில் மலையில் இருந்து இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர் அவர்கள் மலைகளை பாதுகாக்கும் பழங்குடி மக்கள், அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு எங்கள் பயணத்தை தொடங்கினோம். ஒரு குறிப்பிட்ட இடம் வரை ஏறியபின் ஒரு சரிவில் இறங்கினோம் அங்கு மலைக்கு நடுவில் இருந்து வரும் தண்ணீர் சில பாறை மீது பட்டு கிழ் இறங்கி சிறு அருவி போல் காட்சியளித்தது. அந்த சிறு அருவியில் நீண்ட நேரம் குளித்துவிட்டு மேலே ஏறினோம் கவனம் தவறினால் சரிந்து விடும் ஒரு சரிவு அது. மலைகளுக்கு சரிவுகள் தானே அழகு.
பின்பு நீண்ட நேரம் வளைந்து செல்லும் மலையில் எங்கள் பயணம் தொடங்கியது மலை ஏறுவது முதல் கற்கள் துகள்களாகவே இருந்தன. இந்த முறை வேறுஒரு சரிவில் இறங்கினோம் அதே தண்ணீர் சற்று உயரமான இடத்தில் இருந்து விழுந்தது மீண்டும் அந்த அருவியில் குளித்தோம் இப்பொது இலவசமாக உடம்பு வலி போக்கும் மருந்தாக அந்த தண்ணீர் இருந்தது. தண்ணீருக்கும் நிறை உண்டு என்ற அறிவியலின் உண்மை உடம்பில் விழுந்த தண்ணீர் அடியால் உரைத்தது. இன்னும் சிறிது நேரம் நடந்த மலைகளில் வாழும் மக்களை பார்க்கலாம் என்று ஆவலாய் இருந்தோம். அப்போது ஹுபர்ட் அய்யாவிற்கு அலுவலக பணி வந்து விட்டதால் மூவரும் வந்த வழி நோக்கி நடந்தோம். வழியில் மக்கள் பலர் மலை மீது ஏறிக்கொண்டு இருந்தார்கள் சிறுவர்கள் காட்டிற்குள் சுதந்திரமாக விளையாடி கொண்டு இருந்தார்கள் சில சிறுவர்கள் ஓடையில் ஆனந்தமாக நீராடி கொண்டு இருந்தார்கள். இந்த சிறுவர்களும் மக்களும் தான் சுதந்திரகாற்றை சுவாசிக்கின்றவர்கள். சுத்தமான இயற்கை காற்று மாசுபடாத குளிர்ந்த தண்ணீர் இயற்கை மீது காதல் கொண்டே பாடங்களை கற்று கொல்கின்றனர் இதுதானே சுதந்திரம். காட்டிலும் மலையிலும் எனது உடலை பாதித்த பல பருப்பொருட்களினால் ஏற்பட்ட உணர்வோடு சேர்ந்த உணர்சிகளின் வெளிப்பாடை எனக்கு நன்றாக தெரிந்த மொழியில் எனக்கு பிடித்த விடயங்களோடு தொடர்பு படுத்தி வெளிப்படுத்தினேன்.
மலையின் மீது உள்ள தண்ணீர் பல்வேறு வழிகளை கடந்து பாறைகளை தனக்குள் அடித்துவந்து அந்த பாறைகள் ஒன்றோடு ஒன்று மோதி பாறைகள் துகள்களாக மாற்றம் அடைந்து பின்பு அது மண்ணாக உருமாரி அந்த மண் தண்ணீரை சுத்தபடுத்தி அந்த தண்ணீரை வழியனுப்பி வைக்கிறது. இந்த மண் செயல் பாடு உருவாக பல ஆயிரம் வருடங்கள் ஆகும் முதலில் நாங்கள் பார்த்தது தண்ணீர் அதன்பின் மண் பின்பு நாங்கள் பார்த்தது பாறையின் துகள்கள். அந்த அறிவியலை படித்து இருக்கிறேன் இந்த காடும் மலையும் நேரில் காட்டியது. இயற்கையாக நடக்கும் நடைமுறையை தனது வாழ்கைக்கு ஏற்றவாறு அதனை அழிக்காமல் அதனோடு ஒன்றி காதல் கொண்டு பயன் படுத்துவதே பழங்குடி மக்கள்.
ஆற்றலுக்கு அறிவியலில் ஒரு விதி உண்டு “ஆற்றலை அழிக்கவும் முடியாது உருவாக்கவும் முடியாது ஒரு தன்மையில் இருந்து மற்றொரு தன்மைக்கு மாற்ற முடியும்” என்பது தான் அது. அதுபோல் இயற்கையை அழிக்காமல் ஒரு தன்மையில் இருந்து மற்ற தன்மைக்கு மாற்றி பயன்படுத்தி அதனை பாதுகாப்பதே பழங்குடி மக்கள் தான். இந்த சமூகம் இயங்குவது உற்பத்தி பொருட்களினால்தான் அந்த உற்பத்தி பொருட்களின் மூலதனம் காடுகளும் மலைகளும் என்று அறிந்து கொண்ட முதலாளித்துவம் அதனையும் அங்கு வாழும் மக்களையும் கொடூரமாக சுரண்டுகிறது மலைகளும் காடுகளும் தங்களுக்கு சொந்தம் என்று அதிகாரத்தை கையில் எடுத்து அடக்குகிறது. கடந்த இரண்டு நூறாண்டுகளாக உலகத்தில் உள்ள மலைகளையும் காடுகளையும் அங்கு வாழும் மக்களையும் முதலாளித்துவம் அழித்து கொண்டே வருகிறது தனது லாபத்திற்காக. மனிதர்களுக்கு இயற்கையின் பருப்பொருட்கள் உடல் மீது படும்போது உணர்சிகள் வருகிறது, அந்த பருப்பொருளை பயன் படுத்தி அறிவியலின் துணையால் உருவாகப்படும் உற்பத்தி பொருட்களை அனுபவிக்கும் போது உணர்சிகள் வருகின்றது, அந்த பருப்பொருளை அழித்து அதனை பாதுகாத்து வந்த மக்களையும் அழிக்கும் போது உணர்வுகளும் உணர்ச்சிகளும் இறந்து விடுகின்றன அப்படி உணர்வு உணர்ச்சி இறந்து விட்டால் அதனை பிணம் என்று கூரலாம். ஆனால் உயிர் உள்ளது அதனால் அந்த பெயர் சரிவராது குறிபிட்ட சில விடயத்திற்கு மட்டும் உணர்ச்சிவசப்பட்டு முக்கிய விடயத்திற்கு பிணமாக மாறுவதற்கு பெயர் புதிதாக வைக்க வேண்டும். பழங்குடிகளான சிவப்பு இந்தியர்களை விரட்ட வந்த அமெரிக்க ஜனாதிபதியடம் அந்த குழு தலைவர் சியன்டேல் பதில் இன்றும் உலகத்தில் புகழ் பெற்ற ஒரு பதிலாகும் இயற்கைக்கும் மனிதனும் உள்ள ஒற்றுமையை அழகாக உணர்த்தும் அந்த வார்த்தைகள். அந்த வார்த்தைகளை நன்கு ஆராய்ந்தால் முதலாளிதுவத்தின் கொடூரமும் அதனை அனுமதிக்கின்ற நாமும் எவ்வளவு கொடுமையானவர்கள் என்பது புரியும் அந்த வார்த்தைகள் உலகில் உள்ள அணைத்து பழங்குடி மக்கள் நமக்கு கற்று கொடுக்கும் பாடமாகும் அந்த வார்த்தைகள் இதோ “ஆகாயத்தை எப்படி விற்கவோ வாங்கவோ முடியாதோ அதே போல் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது, நிலத்தை விற்பது என்கின்ற எண்ணம் எங்களுக்கு விநோதமாக உள்ளது, காற்றின் தூய்மையும் தண்ணீரின் தூய்மையும் நமக்கு சொந்தம் இல்லை, நமக்கு சொந்தம் இல்லாத ஒரு விடயத்தை எப்படி விற்க முடியும் காடுகள், மலைகள், விலங்குகள், பறவைகள், மனிதன் எல்லாம் இந்த உலகத்தில் ஒரே குடும்பம் தான்., எங்களின் தாகத்தை தீர்க்கும் இந்த நதிகள் எங்களுக்கும் உணவு அளிக்கும் இந்த நதிகள் எங்களின் சகோதரர்கள், எங்கள் சகோதரர்களிடம் நீங்களும் பரிவு காட்ட வேண்டும், இந்த நதியில் ஓடுவது தண்ணீர் மட்டும் அல்ல எங்கள் மூதாதையர்களின் குருதியும் தான், இந்த மண்ணின் ஒரு பகுதி நாங்களும் நீங்களும் தான் இந்த மண் எங்களுக்கு விலைமதிப்பு அற்றது உங்களுக்கும் தான், ஒரு விடயம் நிச்சயமாக தெரியும் இந்த மண் மனிதனுக்கு சொந்தம் கிடையாது மனிதன் தான் மண்ணுக்கு சொந்தம்”.
”மலைகளை பற்றியும் காடுகளை பற்றியும் அங்கு வாழும் மக்களின் வரலாறு பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு இருக்கின்ற பசுமைநடை குழுவிற்கு பாராட்டுகள். பயணங்கள் வாழ்வில் பாடங்களையும்,அனுபவங்களையும் கற்று கொடுத்து கொண்டே இருக்கும் நமது தேடல்களை தீவிரப்படுத்திக்கொண்டே இருக்கும் இந்த பயணமும் எனக்கு அப்படித்தான் இந்த பயணம் செய்ய வாய்பளித்த முத்து கிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும் என்னுடன் பயணம் செய்த பசுமை நடை நண்பர்களுக்கும் நன்றி. இந்த மலைகளில் வாழும் பழங்குடி மக்களையும் அவர்களின் வாழ்கை முறை, இந்த சமூகத்தில் அவர்கள் படும் பாடு போன்ற பல வற்றை தெரிந்துகொள்ள அடுத்த பயணத்திற்கு பசுமைநடை நண்பர்களுடன் செல்ல ஆவலாக உள்ளேன். சிவப்பு இந்தியர்களின் தலைவர் கூரிய வார்த்தைகள் ஒவ்வொரு பசுமைநடைக்கு மலைகள் ஏறும்போது எனது மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் அவரின் குரல் உலகில் உள்ள எல்லா மலைகளிலும் காடுகளிலும் கேட்டுகொண்டே இருக்கின்றன. செவிடாக இருந்த எனது காதுகள் அந்த குரலை கேட்க வைத்தது பசுமைநடை பயணம் தான். மலைகளையும் காடுகளையும் இயற்கைவளங்களையும் முதலாளித்துவம் அழிக்கும் போது நமது கண்கள் குருடாகின்றன அவரது வார்த்தைகளை பார்க்க, நமது காதுகள் செவிடாகின்றன அவரது குரலை கேட்க, நமது உதடுகள் மௌனம் ஆகின்றன அதனை தட்டி கேட்க….இந்த இடத்தில் தான் நாம் மனிதர்களா இல்லை உணர்வு உணர்ச்சி செத்துப்போன பருப்பொருளா என்று கேள்வி எழுப்ப தோனுகிறது. இப்படி எனது உணர்வுகளை பாதித்த விடயத்தை எழுத்தாக வெளிப்படுத்தவேண்டும் என்று நினைத்துகொண்டு இருக்கும்போதே நானும் மது அண்ணாவும் இறங்கும் இடம் வந்தது அன்றைய பயணத்தை முடித்துவிட்டு மறுநாள் தெப்ப குளத்தின் பசுமை நடை பயணத்திற்கு தயாரானேன்……..இன்னும் அந்த தலைவரின் வார்த்தைகள் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது மலை ஏறும்போது மட்டும் தான் கேட்ட வேண்டுமா எல்லா நேரங்களிலும் நமது காதில் கேட்டுகொண்டே இருக்கும் அந்த வரிகளின் ஆழங்களை புரிந்து கொண்டால் மீண்டும் மேலே சென்று அந்த வார்த்தைகளை பாருங்கள் உங்களுக்கும் கேட்கும்……….
pc:cruz antony hubert
Ithai padikum ovoru varigalum palaya sinthanaigali pudhithaga kurapatulathu.sathesh un padaipugal men melum Camara valthykal Machan all thé best u hav créative mind
LikeLiked by 1 person