காலை நேரம் ஒரு பத்து மணி இருக்கும் கதிரவனின் தாக்கம் சற்று மிதமாக இருந்தது வயலில் உள்ள பருத்தி செடி மற்றும் துவரை செடியை எனது கைகள் ஒரு பச்சிளம் குழந்தையை தொடுவது போல் மிருதுவாக தொட்டுக்கொண்டே கால்களும் வயலின் நடுவில் உள்ள பாதையில் மெதுவாக நகர்ந்தது. காற்றின் ஓசையும் பறவைகளின் ஓசையும் தான் அதிகமாக கேட்கிறது, ஆங்காங்கே மனிதர்களின் பேச்சு சத்தமும் கேட்கிறது, நமது பசுமைநடை நண்பர்கள் பேச்சு சத்தம் தான் அது. இயற்கை சூழல் மிகுந்த அமைதியான இடத்தில் பசுமைநடை நிகழ்வை முடித்துவிட்டு அனைவரும் வாகனங்களை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தோம். எனது நினைவுகளோ சனிக்கிழமை முதல் தாம்பரம் MEPZ மறைமலைநகர் மகேந்திர சிட்டி, சிப்காட்(வேலூர்,கடலூர்,சென்னை),etc…. இதனை சுற்றியே இருந்தது இந்த இடங்களை மண்டலங்கள் என்று கூறுவார்கள் தொழில்சாலைகள் அதிகமாக உள்ள மண்டலங்கள். இங்கு உள்ள தொழில்சாலை அனைத்தும் அந்நிய முதலீட்டால் நிறுவப்பட்டதாகும், “அரசாங்க பாணியில் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது அதனால் அந்நிய முதலீட்டை(FDI) இங்கு வரவைத்து பன்னாட்டு கம்பனியை நிறுவ வைத்து அனைவர்க்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறோம்” அரசு கூறும் விளக்கம் இவை. அந்த தொழில்சாலை அமைக்க மூலதனம்(FDI) மட்டும் கம்பனியிடம் இருக்கும் இடம் அனைத்தும் மலிவு விலைக்கு அரசாங்கம் கொடுக்கும். ஒரு சிறிய உதாரணம் நூறு ரூபாய் இடத்தை விவசாயிடம் இருந்து முப்பது ரூபாய் கொடுத்து கொள்ளை அடித்து அதனை பத்து ரூபாய்க்கு பன்னாட்டு தொழில்சாலைகளுக்கு விற்று அதற்கான நீர், மின்சாரம் அனைத்தும் இலவசமாக கொடுத்து இந்த நாட்டில் உள்ள தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கம்பெனி உத்தரவு போட்டால் அரசு பணிவாக தனது வேலையை செய்யும். இப்படி பட்ட சிறப்பு சலுகைகள் பன்னாட்டு முதலாளிகளுக்கு செய்து தருவதற்கு பெயர்தான் சிறப்பு பொருளாதார மண்டலம் (SPECIAL ECONOMICAL ZONE)……… வழி விடுங்கள் என்று பசுமைநடை நண்பர்கள் கூற திரும்பி பார்த்தபோது டிராக்டர் முழுவதும் நண்பர்கள் அமர்ந்துகொண்டு இருந்தார்கள் டிராக்டர் வாகனகள் இருந்த இடத்தை நோக்கி சென்றது. டிராக்டர் சென்றதும் எனது நினைவலைகள் SEZ நோக்கி சென்றன.
நேற்று காலை இதே இடத்திற்கு வாகனம் நிறுத்துவதற்கும் உணவு பகிர இடத்தை பார்பதற்கும் பசுமைநடை ஒருங்கினைபாளர்கள் ரகுநாத் அண்ணா மற்றும் முத்துசெல்வகுமார் அண்ணா அவர்களுடன் வந்து இராமலிங்கம் அய்யாவை சந்தித்ததில் இருந்தே இதை பற்றின சிந்தனைதான் ஓடிக்கொண்டே இருந்தது. இந்த 45வது பசுமைநடை ஒரு முக்கிய நிகழ்வாக மாறிப்போனது. நான் நீண்ட நாள் எதிர்பார்த்த நடை என்று கூறலாம் இராமலிங்கம் அய்யாவை பார்க்கும் வரை எனக்கு தெரியவில்லை நான் மிகவும் எதிர்பார்த்த நடை என்று அவரை பார்த்து அந்த கிராமத்தில் உள்ள பிரச்னையை தெரிந்துகொண்ட போதுதான் தெரிந்தது நாம் ஒரு முக்கியமான ஒரு நடைக்கு வந்து உள்ளோம் என்று. சரி யார் இந்த இராமலிங்கம் அய்யா? இதற்கும் SEZ க்கும் என்ன தொடர்பு? எந்த ஊரில் இன்றைய பசுமைநடை நடந்தது முடிந்தது?……..மீண்டும் ஒரு இருச்சகர வாகனம் வரும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தபோது இரண்டு காவல்துறையினர் நடத்து வந்த எங்களை கடந்து சென்றார்கள்…..சரி காவல்துறை(அதிகாரம்) சென்று விட்டது நாம் நமது கதைக்கு செல்வோம். Sez க்கும் நான் பசுமைநடை நடந்த இடத்திற்கும் இராமலிங்கம் அய்யாவிற்கு தொடர்பு உள்ளது அதனால் தான் எனது நினைவுகள் இந்த மூன்று விடயங்களை சுற்றி வந்துகொண்டே இருகின்றது. அந்த வரலாற்றை சற்று பார்போம்
மதுரை திருமங்கலம் அடுத்து எட்டு கிலோமீட்டர் தாண்டி விருதுநகர் செல்லும் சாலையில் அமைந்துள்ள நான்கு கிராமங்கள் செங்கபடை, சிவரக்கோட்டை, கரைசல்க்காலம்பட்டி, சுவாமிமலைபட்டி. பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்த்த மனிதர்களின் எச்சம் இங்கு கிடைத்துள்ளது. இந்த தகவலில் இருந்து இது மிகவும் பழமையான ஊர் என்று புலனாகிறது ஆனால் எந்த தொல்லியல் பலகையும் இல்லை. பாண்டிய மன்னன் தனக்கு வந்த நோயை குணபடுத்த இந்த கிராமத்திற்கு வந்து ஒரு மண்டலம் தங்கினான் அந்த காலகட்டத்தில் ஒரு கோட்டை கட்டபட்டது அது சுவரால் கட்டப்பட்டதால் சிவரக்கோட்டை என்று பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. இங்கு இருந்த விவசாய நிலத்தை கோவிலுக்கு மன்னன் எழுதி வைத்தான் என்று கூறப்படுகிறது. பாண்டிய மன்னரின் நாட்டிய கலைஞியான செங்கமலநாச்சியாரை குடியமர்த்தி அங்கும் படைகளை பாண்டியன் நிறுவியதால் இங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள இடம் செங்கப்படை என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. சரி ஆயிரம் வருடங்களுக்கு முன் உள்ள வரலாறுகளை பார்த்தோம். இரண்டு மூன்று ஆண்டுகள் முன் நடந்த வரலாற்றை பார்போம்.
இந்த நான்கு கிராமத்தை சுற்றி உள்ள 5000 acre விவசாய நிலங்களை அரசாங்கம் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு தாரை வார்க்க 2007-08 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது பின்பு அது 2500acres ஆக மாற்றியது. 1000acre செங்கப்படை 1500acreசிவரக்கோட்டை,கரைசல்க்கலாம்பட்டி, சுவாமிமலைபட்டி. விவசாயிகளின் பல போராட்டங்களுக்கு பிறகு அரசாங்கம் செங்கபடையை மட்டும் விட்டது இது விவசாய நிலம் என்று அதாவது 1000acre தப்பித்தது. ஆனால் 1500acre அரசாங்கம் விடுவதாக தெரியவில்லை அதற்கு அரசாங்கம் கூறும் பதில் “அந்த நிலங்கள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத வறண்ட நிலங்கள்”.
போராட்டம் இங்கு இருந்து தான் தொடங்குகிறது சிவரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த இராமலிங்கம் அய்யா மக்களை ஒன்று திரட்டி போராடுகிறார் விவசாய நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து காப்பற்ற. இந்த நிலத்தில் முப்பது வகையான பயிர்கள் விளைகின்றன திணை, துவரை, வரகு, உளுந்து, கம்பு, பாசிப்பயறு, கேழ்வரகு, தட்டைப்பயறு, குதிரைவாலி, மொச்சை, சோளம், கொள்ளு, மக்காச்சோளம், சுண்டல், சாமை, வெண்டி, மல்லி, கொத்தவரை, எள், மொச்சைக்காய், ஆமணக்கு, பீர்க்கை, ஓமம், பருத்தி, அவுரி, வேம்பு, நித்யகல்யாணி, புளி. இந்த கிராமங்களில் முப்பது நீர் ஊரணி உள்ளது சிவரகோட்டையில் மட்டும் பத்து ஊரணி உள்ளது. 45 வகை பறவைகள் இங்கு வாழ்கின்றன என்று பதிவு செய்ய பட்டுள்ளது. காட்டு விலங்குகள் அனைத்தும் இங்கு வாழ்வதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் இதுவரை எந்த தொல்லியல் பலகையும் சரி வன விலங்குகள் வாழும் பகுதி என்ற பலகையும் சரி எதுவும் அரசாங்கத்திடம் இருந்து வைக்க படவில்லை sez பலகையை மட்டும் வைக்க துடித்து கொண்டு இருகின்றந்து அரசு.
இதுவரை இங்கு 155 போராட்டங்கள் நடத்தி உள்ளார்கள். அரசாங்கத்தை எதிர்த்து அரசாங்க ஆவணத்தை வைத்தே போராடுகிறார் ராமலிங்கம் அய்யா தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அணைத்து தகவல்களையும் சேகரித்து உள்ளார். இதுவரை இவரிடம் 42000 பக்கங்கள் கொண்ட தகவல்கள் உள்ளன. 1920 முதல் இப்பொது வரை அந்த கிராமத்தை சார்ந்த அணைத்து தகவல்களும் உள்ளன. 250 மக்கள் நிலம் வைத்து உள்ளார்கள் அரசாங்கமோ 96 மக்கள் தான் வைத்து உள்ளார்கள் என்று கூறுகிறது. வன விலங்குகளும் பறவைகளும் அதிகமாக வாழ்கின்றன என்பதை ஆதாரத்தோடு நீதிமன்றத்தில் உறுதிபடுத்தினால் நீதிமன்றத்தை அரசு மாற்றுகிறது பிறகு நீதிபதியை மாற்றுகிறது அந்த தடைகளை தாண்டி மீண்டும் சென்றால் ஆவணங்களை கொளுந்துகின்றது இந்த அரசு. அணைத்து தடைகளையும் தாண்டி மக்கள் இன்றுவரை போராடிக்கொண்டு இருகின்றார்கள். மக்களின் பலவீனமாகிய சாதியை பயன்படுத்தி அதனை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகளை வைத்து மக்களின் ஒற்றுமையை சிதைக்க அரசாங்கம் தனது சூழ்ச்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருகின்றது. இராமலிங்கம் அய்யா சாதியை உடைத்து அரசாங்க தடைகளை உடைத்து மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக ரீதியாக போராடிக்கொண்டு இருகின்றார்.
அனைத்தையும் நினைத்துகொண்டே வயலில் மெதுவாக நடதுகொண்டு இருந்தேன் வயலின் நடுவில் டிராக்டர் நின்று கொண்டு இருக்க பசுமைநடை மக்கள் அனைவருக்கும் இராமலிங்கம் அய்யா தனது நிலத்தில் விளைந்த சுண்டலை அனைவர்க்கும் அன்போடு பகிர்ந்து கொண்டு இருந்தார். நேற்று அவர் கூறிய வார்த்தைகள் யாவும் எனது காதில் மீண்டும் கேட்க தொடங்கின “தம்பி இங்கு நாங்கள் ரசாயன மருந்து அடிப்பதில்லை பறவைகளுக்கு உணவு இந்த வயல் தான் அதை எப்படி நாங்கள் கொள்வது யாருக்கும் அந்த உரிமை கிடையாது..காட்டில் புகை போடமாட்டோம் பறவைகள் அழிந்துவிடும் என்று, விலங்குகள் வயலில் வந்து உண்ணும் அது விட்டு போக மிச்சத்தை தான் நாங்கள் எடுத்து கொள்வோம். பறவைகளும் விலங்குகளும் இந்த காட்டில் இருப்பதால்தான் காடு செழிப்பாக இருகின்றது. நிலமும் விலங்குகளும் பறவைகளும் தான் காட்டை பாதுகாத்து எங்களது வாழ்வாதாரத்தை வளர்கின்றது. இவற்றை மனிதர்களிடம் இருந்து காப்பாற்ற தான் போராடி கொண்டு இருகின்றோம்”. இந்த வார்த்தைகளை கேட்டதும் எனக்கு 1854யில் சிவபிந்தியர்கள் தலைவர் சியன்டேல் காட்டை விலைக்கு (அழிக்க) வாங்க வந்த அமெரிக்க ஜனாதிபதியிடம் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது “ஆகாயத்தை எப்படி விற்கவோ வாங்கவோ முடியாதோ அதே போல் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது, நிலத்தை விற்பது என்கின்ற எண்ணம் எங்களுக்கு விநோதமாக உள்ளது, காற்றின் தூய்மையும் தண்ணீரின் தூய்மையும் நமக்கு சொந்தம் இல்லை, நமக்கு சொந்தம் இல்லாத ஒரு விடயத்தை எப்படி விற்க முடியும் காடுகள், மலைகள், விலங்குகள், பறவைகள், மனிதன் எல்லாம் இந்த உலகத்தில் ஒரே குடும்பம் தான்., எங்களின் தாகத்தை தீர்க்கும் இந்த நதிகள் எங்களுக்கும் உணவு அளிக்கும் இந்த நதிகள் எங்களின் சகோதரர்கள், எங்கள் சகோதரர்களிடம் நீங்களும் பரிவு காட்ட வேண்டும், இந்த நதியில் ஓடுவது தண்ணீர் மட்டும் அல்ல எங்கள் மூதாதையர்களின் குருதியும் தான், இந்த மண்ணின் ஒரு பகுதி நாங்களும் நீங்களும் தான் இந்த மண் எங்களுக்கு விலைமதிப்பு அற்றது உங்களுக்கும் தான், ஒரு விடயம் நிச்சயமாக தெரியும் இந்த மண் மனிதனுக்கு சொந்தம் கிடையாது மனிதன் தான் மண்ணுக்கு சொந்தம்”. எனது கண் முன் அந்த தலைவர் சியன்டேல் இராமலிங்கம் அய்யா உருவத்தில் தெரிந்தார். இயற்கையை நேசித்து காடுகளை தங்களின் சொந்த வீடு போல் பாதுகாக்கும் அனைவரின் வார்த்தைகள் ஒன்றுதான் என்பது இந்த இரண்டு மனிதர்களின் சொற்களில் புரிந்துகொண்டேன்.
இராமலிங்கம் அய்யா மற்றும் சியன்டேல் அவர்களை நினைத்துகொண்டே இருந்தேன் அன்று அவரும் இப்படித்தானே போராடி இருப்பார் அரசை எதிர்த்து. பாண்டிய மன்னன் கோவிலுக்கு இந்த இடத்தை எழுதிவைத்தான் என்று வரலாறு சொல்கிறது. அன்றைய காலகட்டத்தில் கோவில் என்பது நிலத்தை மக்களிடம் இருந்து அபகரிக்கும் ஒரு நிறுவனமே என்பது அனைவர்க்கும் தெரியும். எந்த காலகட்டத்திலும் அரசாங்கம் மக்களுக்கு இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது அன்றைய அரசு பாண்டிய மன்னன் மக்கள் நிலத்தை கோவிலுக்கு எழுதி வைத்தான். இன்றைய அரசு தொழில்சாலைகளுக்கு எழுதி வைக்கின்றது. அன்றைய கால கட்டத்தில் எத்தனை இராமலிங்கம் சியன்டேல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை அது மன்னனின் அதிகாரத்தால் அழிந்து இருக்கலாம். இன்று இராமலிங்கம் அய்யா போராட்டம் சிவரக்கோட்டை மக்கள் போராட்டம் ஆவன படுத்த வேண்டும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இயற்கையின் மீது அரசாங்கம் நடத்தும் ஒடுக்கு முறையை நினைக்கும் போது எங்க்லஸ் கூறிய வார்த்தை நினைவிற்கு வருகின்றது “இயற்கையின் மீது மனித வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவொன்றுகும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது,முன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத,முற்றிலும் வேறுபட்ட நிலைகளாக நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறு பலன்களையும் அளிக்கிறது; இவை பல தடவைகளில் முதலில் சொன்னதை ரத்து செய்து விடுகின்றன.”-எங்கெல்ஸ் (“மனிதக்குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைபடியில் உழைப்பின் பாத்திரம்” நூலிலிருந்து).
சிறப்பு பொருளாதார மண்டலம் வந்தால் எந்த நன்மையையும் மக்களுக்கு கிடைக்க போவது இல்லை வேலை கிடைக்கும் அதனால் மகிழ்ச்சி பொங்கும் நாடு வளர்ச்சி அடையும் என்பது எல்லாம் அரசாங்கம் காட்டும் மாயஜாலம். அதற்கு ஆதாரம் வேலூர் சென்னை கடலூர் போன்ற மாவட்டங்களில் அமைந்த SEZயில் வேலை செய்யும் சாமான்ய மக்களும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் படும் துயரம் தான்.. அரசாங்கம் உருவாக்கி இருக்கும் வலையில் இன்றைய மாணவர்களை விழ வைக்க அரசு சிறப்பாக வேலை செய்து கொண்டு இருகின்றது. நேற்று இன்று நடத்த விடயம் இல்லை இது தொழிற்புரட்சி, உலகமயமாக்கல் பிறந்ததில் இருந்தே இது நடந்தது கொண்டு இருகின்றது. அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு இயற்கைக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு அறுந்து போகும் அனைவரும் SEZ யை ஆதரித்து போராடுவார்கள் அரசாங்கம் கல்லூரிகளில் பள்ளிகளில் மாணவர்களை இப்படிதான் உருவாக்குகின்றது. அந்த அரசாங்கத்தை வடிவமைப்பது முதலாளித்துவம்…….அந்த அமைதியான வயலில் நடந்தது வந்த போது மனதில் தோன்றிய பல விடயங்கள் பல புரிதல்களை ஏற்படுத்தியது. சிவரகோட்டை விட்டு கிளம்பும் நேரம் வந்தது பசுமைநடை நண்பர்கள் அனைவரும் கலைந்தார்கள் நானும் அந்த போராட்ட பூமியில் இருந்து கிளம்பினேன் மனதில் பல நினைவுகளுடன் பல கேள்விகளுடன் ஒவ்வொரு மண்டலத்திற்கு பின்னால் ஒரு கிராமம் எப்படி இருந்து இருக்கும் என்பதை உணர்த்தியது சிவரக்கோட்டை எத்தனை இராமலிங்கம் போராடினார்களோ தெரியவில்லை இந்த கிராமத்தை அறிமுக படுத்திய பசுமைடைக்கு நன்றி……..நேற்று(31.1.2015) இராமலிங்கம் அய்யாவிடம் பேசியதும் இன்று(1.2.2015) காலை மக்களிடம் முத்து கிருஷ்ணன் அய்யா மற்றும் இராமலிங்கம் அய்யா பேசியதும் நினைவுகள் தொடர்ந்து என்னை ஆளுமை செய்துகொண்டே இருக்கின்றன…….காத்துகொண்டு இருக்கின்றேன் அடுத்த பசுமைநடைக்கு.
Photos: Arun Boss
சிவரக்கோட்டை போராட்டத்தை பற்றிய தகவல்கள்
http://www.mgrtv.com/sivarakottai-farmers-wait-jayalalithaas-intervention.html
அற்புதமான பதிவு
ஆழமான கருத்துக்கள்
இணைப்பாக பத்திரிக்கை செய்தி என பதிவு படிப்பவர்கள் சிவரக்கோட்டை விவசாய நிலம்பற்றி அறிந்து கொள்ள முடியும்
LikeLiked by 1 person
சிவரக்கோட்டை நடை குறித்த மிக விரிவான, அருமையான பதிவு. ஒவ்வொரு மண்டலத்திற்கு பின்னாலும் ஒரு கிராமம் இருக்கும் என்ற வரிகள் மனதைத் தொடுகிறது. சிவப்பிந்தியர்களின் தலைவர் சியன்டேல் சொன்ன வரிகள் நாம் எல்லாச் சுவர்களிலும் எழுதி வைக்க வேண்டியவை. மிகவும் ஆழ்ந்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
LikeLiked by 1 person
Massive effort… Proud of you Brother… Keep it up… Keep on writing…
LikeLiked by 1 person
Great work.. Keep going on……
LikeLiked by 1 person
Stunning article.
சிவரக்கோட்டை குறித்த எனது பதிவும் தயாராகி வருகிறது. நீ கொடுத்த தகவல்கள் கொஞ்சம் பகிர்ந்து கொள்கிறேன் தம்பி.
நன்றி.
LikeLiked by 1 person