நான் மனிதனும் இல்லை, விலங்கும் இல்லை மனிதர்களிடம் வாழ்பவன் நான் யார் ???????என்னை பற்றி கூறுகிறேன்………….. கொலைகளை தொடர்ந்து செய்து எனது ஆதிக்கத்தை நான் நிலைநாட்டிக்கொண்டு இருக்கின்றேன் உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது……நான் ஒரு நண்பனாக உங்களுக்கு ஒன்றை கற்றுகொடுக்கிறேன் அது என்னவென்றால் சுயமரியதையாக இருக்க கூடாது, மூடநம்பிகையில் எப்பொதும் முழுகி இருக்கவேண்டும், பிரச்சனைகளை மூன்று நாட்களில் மறந்துவிடவேண்டும், எந்த சம்பவம் நடந்தாலும் தனிப்பட்ட மனிதர்களை மட்டும் தான் விமர்சிக்க வேண்டும் தவறியும் அதற்கு பின்னால் இருக்கும் எங்களை சீண்ட கூடாது, இங்கு இருக்கும் ஒவ்வொரு மனிதர்களிடம் நான் இருக்கின்றேன் உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, என்னை அழிப்பது ஒரு முட்டாள்தனம் அதனால் தான் என்னை பல பேர் புத்திசாலித்தனமாக அனுசரித்து செல்கிறார்கள். உங்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்றால் நான் ஏற்படுத்திய ஏற்ற தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து ஆறுதல் படுத்திக்கொள்ளுங்கள் இதை அனைத்தும் உருவாக்கி இப்பொது வரை அதை சரியாக பாதுகாத்து வருகின்ற என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
இந்தியாவில் உள்ள அணைத்து வீடுகளும் என்னை புனிதமாக பார்த்துகொண்டு இருகின்றது, நான் மக்களின் உயிராக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். எனது கட்டளைப்படித்தான் இங்கு அனைத்தும் நடக்கின்றது. இந்த சமூகத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போது அடுத்த நொடியே நானும் குழந்தையும் ஒன்றாகி விடுவோம் அது வளர வளர நானும் அதனுள் வளர்ந்துகொண்டே போகிறேன். என்னை எதிர்த்து உங்களால் ஒரு சிறு துரும்பை கூட நகர்த்த முடியாது. என்னை எதிர்த்தால் நீங்கள் தனிமைப்படுத்த படுவீர்கள், ஒடுக்கபடுவீர்கள், கொலை செய்ய படுவீர்கள், எந்த சமூகத்திற்காக நீங்கள் என்னை எதிர்கின்றிர்களோ அதே சமூகம் உங்களை அழித்து விடும். ஒவ்வொரு மக்களிடமும் என்னை நீங்கள் பார்க்கலாம் இங்கு மக்களே நான் தான். பலபேருக்கு நான்தான் அணைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது தெரியாது அதற்கு அவர்களுக்கு பகுத்தறிவு வேண்டுமே அதை அவர்களுக்கு வரவிடாமல் பாதுகாப்பதே நான்தான். உங்களது மூடனம்பிகை, பயம், அலட்சியம், வேற்றுமை பார்த்தல் தான் எனது பலம், நான் ஒரு பொருளோ, உயிரினமோ அல்ல அழிப்பதற்கு நான் ஒரு உணர்வு கிருமியும் சில தொலைவுகளுக்கு தான் பரவும் நான் அதைவிட பலம் பொருந்தியவன் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எந்த தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாமல் இந்த நிலப்பரப்பு முழுவதும் மக்களின் மனதில் பரவினேன்.
ஒரு வேடிக்கை என்னவென்றால் தொழில்நுட்பம் அதிகரிக்க நான் அழிந்துவிடுவேன் என்று சிலர் கூறுகிறார்கள் அவர்களின் வசனத்தை நான் கண்டு நகைப்பதுண்டு நான் பார்க்காத பரிணாம வளர்ச்சியா? சூழ்நிலைக்கு தங்குதாற்போல் நான் என்னை மாற்றிகொண்டே வருகிறேன் உங்களால் என்னை எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் வெளியில் பல வசனங்கள் பேசினாலும் வீட்டிற்கு வந்தவுடன் என்னை கண்டு நடுங்குவார்கள், என்னை எதிர்க்க அவர்களால் முடியாது அவர்கள் வீட்டில் நான் கம்பீரமாக இருக்கின்றேன். இத்தனை வருடமாக என்னை பாதுகாத்து ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தி என்னை உயிர் வாழவைப்பதே மக்கள் தான் அவர்கள் என்னை எதிர்க்க மாட்டார்கள் நான் அவர்களுக்கு கடவுள். என்னை பாதுகாப்பதற்காகதான் கடவுள் என்ற அதிகாரம் உருவாக்கபட்டது. ஒவ்வொரு ஆண்களிடமும் என்னை நீங்கள் பார்க்கலாம் பெண்கள் எனக்கு அடிமை. அவர்கள் அடிமையாகவே இருக்க அணைத்து வழிகளும் நான் செய்துவிட்டேன் இன்றும் அவர்கள் எனது கட்டுபாட்டில் தான் இருகின்றார்கள் சுதந்திரம் என்றால் என்ன என்று உணர்ந்த பெண்களுக்கு தெரியும் அவர்கள் எனது கட்டுபாட்டில் இருப்பது, அடிமைத்தனத்தை அழகியலாக மாற்றுகிறேன் அதனால் அவர்களுக்கு இன்று அடிமை என்று தெரிய வாய்ப்பு இல்லை அதுதான் எனது வெற்றி.
உங்களது பண்பாடுகளில் நான் உள்ளேன், குடும்ப பழக்கத்தில் நான் உள்ளேன், உங்களது வீரத்தில் நான் உள்ளேன் உங்களின் ஒவ்வொரு உணர்விலும் நான் கலந்துள்ளேன் என்னை அழிப்பது எளிதான காரியமா? ஹா ஹா ஹாஒன்று தெரியுமா என்னை எதிர்பதாக பாசாங்கு செய்பவர்களுக்குள் நான் அமைதியாக அமர்ந்துகொண்டு சிரித்துகொண்டு இருப்பேன் அவன் என்னை வார்த்தைகளால் தான் என்னை எதிர்ப்பார்கள் செயலால் அல்ல ஹா ஹா ஹா….என்னை கடவுளாக பார்த்த மனிதன் இறந்துபோகும் பொது நான் அவனுடன் சேர்ந்து அழிவதில்லை அவன் மூலமாக பல மனிதர்களிடம் வெற்றிகரமாக சேர்ந்து இருப்பேன். நான் இந்த காலத்தில் எப்படி உருவாகிறேன் எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்த படுகிறேன் என்பதே பல மக்களுக்கு புரியாது பின்பு எப்படி என்னை நீங்கள் அழிக்க முடியும். என்னை யாரேனும் எதிர்த்தால் வாழ்க்கை முழுவதும் போராட வேண்டும் இல்லை சாக வேண்டும் இந்த இரண்டும் தான் இப்பொது நடந்து கொண்டு இருகின்றது
ஒரு முட்டாள் என்னை சரியாக புரிந்துகொண்டதாக நினைத்து என்னை ஒரு கதாபாத்திரமாக மாற்றி என்னை பற்றி நானே சொல்வது போல் சித்தரிக்கிறான், என்னை பற்றி புரியவைக்க புதிதாக முயற்சி செய்துகொண்டு இருகின்றான் ஹா ஹா ஹா இதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை இதை படிப்பவர்களிடம் நான் இருப்பேன் இந்த எழுத்தின் அர்த்தம் அவர்களுக்கு புரியாது. என்னை பற்றி புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த எழுத்தின் அர்த்தம் புரியும். என்னை பற்றி புரிந்துகொள்ளாதவர்கள் எனது நண்பர்கள் புரிந்துகொண்டவர்கள் எனது எதிரிகள். என்னை எதிர்பவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் போர்க்களம்தான் அதனால் தான் சிலர் என்னை பற்றி புரிந்துகொள்ளாதவர்கள் போல் நடித்து எனக்கு நண்பர்களாக வாழ்ந்து கொண்டு இருகிறார்கள் அவர்கள் போர்களத்தை விரும்பவில்லை……………………….எனது பெயர் சாதி………………………………….பிறப்பிடம் இந்து மதம்……………….