அழிக்கப்படும் புலிகள்

பாதுகாப்பு என்று கொலைசெய்யப்பட்ட புலிகள்

எனது பள்ளி பருவத்தில் கட்டுரை,பேச்சு போட்டி நடக்கும் போது அதில் அதிகமாக வரும் ஒரு தலைப்பு புலிகளை ஏன் பாதுகாக்க வேண்டும் அப்போது சமூக விழிப்புணர்வு என்பது எனக்கு கிடையாது. நாங்கள் அனைவரும் அதை ஒரு போட்டியாக மட்டுமே பார்த்தோம் அதில் இருக்கும் வார்த்தைகளின் முக்கியதுவத்தை அறியவில்லை. கல்லூரி படிக்கும் போது இந்த விடயத்தை பல பேர் சொல்லி அறிந்துள்ளேன் அப்போதும் பெரிய விழிப்புணர்வு இல்லை வெறும் செய்தியாகவே அறிந்தேன். கல்லூரி முடிந்த பின்பு சமூகத்தை பற்றி பல நண்பர்களுடனும்  பல புத்தகங்களை வாசிக்கும் போது சமூக விழிப்புணர்வு விதையில் இருந்து வரும் செடி போல துளிர் விட்டு முளைத்தது. முதலாளித்துவம் கல்வியில் புகுந்து நாம் பள்ளி கல்லூரிகளின்  பாடத்திற்கும் சமூகத்திற்கும் தொடர்பு இல்லாமல்  மாணவர்களின் மூலையை மந்தம் ஆக்கியது, அப்படி இருக்கும் போது பாடத்திற்கு வெளியில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அதை மாணவன் ஒரு செய்தியாக மட்டுமே பார்ப்பான் என்பதை கற்று கொண்டேன். காடு-விலங்குகள்-மனிதன் இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று  தொடர்புடையது என்பது அனைவரும் அறிந்ததே. இவை அனைத்தும் அனைவரும் பள்ளியில் படித்ததுதான் ஆனால் மதிப்பெண் எடுபதர்க்காகவே அனைவரும் கற்பிக்க பட்டுள்ளோம் அதனால் தான் அதனை உணர்வுபூர்வமாக உணர முடியவில்லை அடுத்த வகுப்பிலே அதனை மறந்தோம். உணவு சங்கலி,இயற்கை சங்கலி எதுவும் அறுபடாமல் இருந்தால்தான் மனித வாழ்வு சாத்தியம். அதில் ஏதேனும் ஒன்று அறுபட்டாலும் மனித வாழ்வுக்கு பெரிய ஆபத்து. ஆனால் அந்த சுழற்சியில் ஒரு பாகம் மட்டும் இல்லை ஒவ்வொரு பாகமும் கொடூரமாக அறுக்க படுகிறது முதலாளித்துவத்தின் லாபம் என்னும் கத்தியால்.பல  காடுகளையும் விலங்குகளையும் மனிதர்களையும் கொன்றது அந்த கத்தி. அதில் ஒரு பகுதியாக அந்த கத்தியால் கொலைசெய்யப்பட்ட புலியை பற்றியது தான் இந்த கட்டுரை.

புலிகளை பாதுக்காக வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற அரசாங்கமே அதனை கொன்று மக்களை துயரத்தில் இருந்து காப்பற்றி விட்டோம் என மகிழ்ச்சியடைந்து ஊடகங்களில் கொண்டாடியது குழப்பமாக இருந்தது எனக்கு. ஊடகமோ  மனிதர்கள் இருக்கும் இடத்தில் புலி வந்து அவர்களை கொன்றது அதனால் அரசு மக்களை காப்பற்ற புலியை கொன்றது என செய்திகளை பரப்பின. இந்த கோமாளி தனத்தை பற்றி எங்கெல்ஸ் கூறியது நினைவிற்கு வருகிறது இயற்கையின் மீது மனித வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவொன்றுகும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது,முன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத,முற்றிலும் வேறுபட்ட நிலைகளாக நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறு பலன்களையும் அளிக்கிறது; இவை பல தடவைகளில் முதலில் சொன்னதை ரத்து செய்து விடுகின்றன.”-எங்கெல்ஸ் (“மனிதக்குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைபடியில் உழைப்பின் பாத்திரம்” நூலிலிருந்து). ஒரு சாமான்ய மனிதனை ஊடகம் எப்படி மந்தையாக மாற்றுகிறது என்பதை அறிந்து எனது தேடலை அந்த விடயத்தில் தொடங்கினேன் பூவுலகு என்னும் இதழை வாசிக்கும் போது பல விடயம் புரிந்தது.

சங்கலிப் பிணைப்பில் எந்தவொரு கண்ணி அறுந்தாலும், அதன் பாதிப்பு மற்றொரு இடத்தில் கடுமையாக எதிரொளிக்கவே செய்யும். அதற்கான சாட்சி தான் தொட்டபெட்டாவில் சுட்டுக்கொல்ல பட்ட ஆண் புலி. புலிகளின் இருப்பிடமான காடுகளையும்,அதன் உணவுகளையும் அழித்துவிட்டு மனிதனுக்கும் விலங்கிற்கும் மோதலை ஏற்படுத்தி அவற்றை கொல்கிறது அரசு. இது ஒருபுறம் இருக்க புலிகளை பாதுகாப்போம் என்று காப்பகத்தை உருவாக்கி அங்கு வாழும் பழங்குடி மக்களை சட்டங்களை பின் பற்றாமல் கொடூரமாக விரட்டி அடிக்கிறது அரசாங்கம். முதலாளித்துவதிற்கு தேவை லாபம் மட்டுமே அதனால் தான் அரசாங்கத்தை வைத்து மக்களை காப்பாற்றுகிறோம் என்று புலியையும் புலியை காப்பாற்றுகிறோம் என்று மக்களையும் கொன்று லாபம் பார்கின்றன. இந்த கொடூரத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள எனது தேடலை அதிகமாக்கினேன் அப்போது ஒரு நண்பரின் மூலம் எனக்கு கிடைத்த புத்தகம் “கானுறை வேங்கை-கே.உல்லாஸ் கரந்த்”. இந்த புத்தகம் புலியின் தோற்றம்,வரலாறு நாம் ஏன் புலிகளை பாதுகாக்க வேண்டும், புலிகள் எப்படி அழிந்தது போன்ற பல  தகவல்களை இந்த புத்தகம் அறிவியல் பூர்வமாக அலசுகிறது. இந்த புத்தகம் புலியின் ஆராய்ச்சி புத்தகம் என்றே சொல்லலாம், அதிலிருந்து சில தகவல்களை வைத்து புலியின் அழிவை பற்றி பார்போம்.

download

புலியின் தோற்றம்

இந்த உலகத்தில் பாலூட்டிகள் 26 அலகுகளாக வகைபடுத்த பட்டுள்ளது. புலிகள் ஊனுன்ணிகள் வகையை சார்ந்தது இதில் புலி பூனை குடும்பத்தை சேர்ந்தது. பூனை குடும்பத்தினுள் புலி பாந்த்தீரா எனும் பேரினத்தைச் சேர்ந்தது. இவை உறுமும் பூனைகளாகும், மற்ற பூனைகளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு உறுமல் எழுப்ப உதவும் தொண்டையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு எலும்பு.

இந்தியாவில் புலி தோன்றிய காலம்

இன்றைய இந்திய கண்டத்தில் ஏறத்தாழ 12000 ஆண்டுகளுக்கு முன்புதான் புலி குடியேறியிருக்க வேண்டும் இந்தயாவில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக ஆசியாவிற்கு பரவி இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

புலியின் வாழ்விடம்

35 டிகிரி செல்ஷியஸ் கடுங்குளிர் நிறைந்த தூரக் கிழக்கு ரஷ்யாவிலும் 48 டிகிரி செல்ஷியஸ் அனல் பறக்கும் இந்தியாவிலும் புலி வாழ்கிறது. 600 மில்லி மீட்டரே மழை பொழியும் காடுகளிலும் மற்றும் 10,000 மில்லி மீட்டர் மழை காடுகளிலும் புலி வசிக்கும்.

புலியின் இரை

புலியின் இரை கரையானிலிருந்து யானைக்கன்று வரை விரிந்தது, இருபினும் அவை பெரும் குளம்பிகளை (20 கிலோவிற்கு மேற்பட்ட) சார்ந்தே இருக்கின்றன, இவ்வகையான இரை விலங்குகள் இல்லாத இடத்தில் புலிகள் உயிர்வாழ இயலாது.

புலிகளுக்கும் மனித வாழ்விற்கும் உள்ள தொடர்பு

இன்றைய அன்றாட வாழ்விலேயே புலிகளின் உறைவிடங்கள் நமக்கு நன்மை பயகின்றன என்பதை நாம் உணர வேண்டும். வேங்கையின் வாழ்விடமான காடுகள்தான் கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி மற்றும் மீகாங் போன்ற நதிகளின் படுகைகளாகும். அது மட்டுமல்லாமல் வெள்ளப் பெருக்கை சீராக்கி மண்ணரிப்பையும் இந்தக் காடுகள் தடுக்கின்றன. இந்த நதிகளை நம்பி வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இக்காடுகளின் வளம் முக்கியமானது. இந்த ஒரு உதாரணம் போதும் புலிகளினால் ஏற்படும் நன்மையை புரிந்து கொள்ள,வேங்கை காடுகளை பாதுகாக்கின்றன அவை வாழ வேண்டும் என்றால் அதற்கான உணவு வேண்டும் அதற்கு காடுகள் மிகவும் அவசியம். இதிலிருந்து ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பது தெரிகிறது. தனது லாபத்திற்காக காடுகளை அழிப்பதும் அங்கு இருக்கின்ற விலங்குகளை அழிப்பதும் புலிக்கு இரை இல்லாமல் செய்து அதன் இனத்தை அழித்து கடைசியில் புலியையும் கொள்வது தான் முதலாளியத்தின் கொள்கை. சுழற்சியின் ஒரு பாகத்தை அழித்தாலே விளைவுகள் அதிகமாக வரும் இவர்கள் ஒவ்வொரு பாகத்தையும் இப்படிதான் அழிகிறார்கள் இதன் விளைவு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உள்ளது.

Tigerarunachalstory

புலியின் அழிவு

புலி வாழும் நாடுகளில் அவைகளின் உறைவிடமான காட்டுப் பிரதேசம் ஐந்து விழுக்காடு நிலப்பரப்பு மட்டுமே. முண்ணூறு கோடி மக்கள் வாழும் ஆசிய கண்டத்தில் இந்த சிறிய நிலபரப்பை அழிபதனால் சாதித்து விட போவது ஒன்றும் இல்லை. புலி ஒரு நாளைக்கு 35 கிலோ இறைச்சி உண்ணும், இரைவிலங்கில் பத்து விழுக்காடு புலிக்கு இரையாகிறது, ஆண்டிற்கு 50 இரைவிலங்கில் புலிக்கு இரையாகும். குட்டி போடும் புலியாக இருந்தால் 70 இரைவிலங்கில் புலிகள் அடித்தாக வேண்டும். புலிக்கு இரையாகும் விலங்குகள் காடுகளை அழிப்பதனால் அழிந்து விடுகின்றன புலிகளும் உணவு இல்லாமல் அழிந்து விடுகிறது இருக்கும் புலிகளோ இரையை தேடி மனிதர் இருக்கும் இடத்திற்கு வருகிறது. இது புலியின் தவறு அல்ல காடுகளை அழித்தவர்களின் தவறு. 100 சதுர கிலோமீட்டர் காடுகளில் 8 முதல் 17 புலிகள் இருந்த இடத்தில் 2 அல்லது 3 தான் உள்ளன. புலிகளை இரண்டுவகையாக கொல்கின்றனர். காடுகளை அழித்து கொள்வதை பார்த்தோம் மற்றொன்று வேட்டை என்று ஆதிக்க சக்திகள் தங்கள் பொழுதுபோக்கிற்காக கொல்கின்றனர். புலியின் தோல், பற்கள் நல்ல சந்தையில் நல்ல விலை போகும் என்று கொடூரமான முறையில் அவற்றை கொல்கின்றனர். 1960 களில் ஒரு புதுவிதமான வேடைகாரர்கள் ஆசியாவில் தோன்றினர். புலி ஒன்றை எப்படியாவது சுட்டுவிட வேண்டும் என்று எண்ணிய வெளிநாட்டு செல்வந்தர்களை மனதில் கொண்டு, இந்தியாவிலும் நேபாளத்திலும், ஆப்பிரிக்காவில் இருப்பதுபோல, வேட்டைக்கான வசதிகள் செய்து தரக்கூடிய நிறுவனங்கள் பல தோன்றின. இவர்கள் அனைவரும் சேர்ந்து புலியை அழிவின் விளிம்பிற்கே கொண்டு சென்றார்கள். பல சுற்றுசுழல் ஆர்வலர்களின் கடின உழைப்பால் புலிகளை பாதுக்காக அரசால் சட்டம் ஏற்ற பட்டது. நமது நாட்டில் சட்டம் எழுத்து வடிவில் மட்டும் தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். வேட்டையாடும் ஆதிக்க சக்திகளை ஒன்றும் செய்யாமல் இயற்கையோடும் விலங்குகளோடும் ஒன்றி வாழும் பழங்குடி மக்களை அவர்கள் இடத்தை விட்டு கொடூரமாக விரட்டுகிறது இந்த அரசு. விட்டில் ஒரு புலியை வளர்த்து கொஞ்சம் பெரிதான உடன் காட்டில் விடலாம் என்றால் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்குமோ அப்படித்தான் காப்பகத்தில் வளர்த்து காட்டில் விடலாம் என்ற அரசு கோரிக்கை. புலிகளை பாதுக்காக காடுகளை அழிக்காமல் செம்மை படுத்த வேண்டும். காடுகளை சார்ந்து வாழும் மக்களை எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும் அவர்கள் காடுகளை பாதுகாப்பார்கள். காடுகளையும் அழித்து, வேடைகாரர்களை காட்டிற்குள் நுழைய விட்டு, பழங்குடி மக்களை அங்கு இருந்து விரட்டிவிட்டு அனைத்தும் புலியின் பாதுகாப்பு என்று அரசு கூறுவது நகைமுரண். புலிகள் அழிவதற்கு பின்னால் முதலாளித்துவம், அதற்கு பணிந்து போகும் அரசாங்கம் இந்த உண்மைகளை மாணவர்களுக்கு பள்ளி கல்லூரியில்  சொல்ல வாய்ப்பே இல்லை அவர்களுக்கு ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு அரசாங்கம் நலனுக்காகவும் முதலாளிகளின் நலனுக்காகவும் மட்டுமே இருக்கும் அதை விழிப்புணர்வு என்று சொல்வது சரியன வார்த்தை அல்ல.

நல்லம்பாக்கம்

20140301_092700

…….*****The Time is 6 AM****………****The Time is 6:15am****…………*****The Time is 6:30am****

டேய் மச்சிசிசி………. அந்த அலாரத்த நிறுத்துடா என்று அருள்  கூற கண்களை திறந்து பார்த்தால் மணி ஏழு. மச்சி மணி ஏழுடா என்று சொல்லிக்கொண்டே குளிக்க சென்றேன். 7:3௦ மணிக்கு சாப்பிட்டு 7:40க்கு பேருந்து ஏறினால் தான் 8 மணிக்கு கல்லூரி செல்லமுடியும்.8:10க்கு கல்லூரி ஆரம்பம், இதை நினைத்துகொண்டே இன்னும் இருவர் குளிக்க வேண்டும் என்று அவசரமாக  குளித்து விட்டு வெளியே வந்தால் அருள் ,காளிதாஸ் இருவரும் கிளம்பி விட்டார்கள். நேரம் ஆகிவிட்டது அதனால் குளிக்கவில்லை.

அவர்கள் 9 மணிக்கு வேலைக்கு செல்ல 7:3௦ மணிக்கு பேருந்து பிடிக்க வேண்டும். அருள்,காளிதாஸ் என்னுடன் படித்த நண்பர்கள். இருவரும் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்கள். படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்க வில்லை, அதனால் கிடைத்த வேலையை செய்து கொண்டு இருகிறார்கள். ஒருவன் கால் சென்டர் மற்றொருவன் மார்க்கெட்டிங். நாங்கள் மூவரும் மேல்படிப்புக்கு விண்ணப்பம் செய்தோம். காளிதாஸ் ஐ.ஏ.ஸ் பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டான். அருள் வீட்டின் வறுமை நிலைமையை புரிந்து, அடுத்த வருடம் படிக்க திட்டமிட்டு  உள்ளான். நான் மேற்படிப்பு படித்து வருகிறேன். நாங்கள் அனைவரும் ஒரே கல்லூரியில் பொறியல் (பி.இ) படித்த மாணவர்கள்.அதே கல்லூரியில் இப்பழுது நான் எம்.இ. படித்து வருகிறேன்.

இந்த கதை சொல்லிக் கொண்டிருக்கும் என் பெயர் விக்னேஷ். எனது அன்றாட  பயணத்துடன் உங்களை ஒருநாள் அழைத்து செல்கிறேன். பயணத்திற்கு தயாராகுங்கள்…

20140228_164751

இதோ நானும் கல்லூரிக்கு கிளம்பிவிட்டேன். மளிகைக் கடை பாய்,ரீசார்ஜ் கடை அண்ணா, இட்லி கடை பாட்டி,பிள்ளையார் கோவில்,ஆவின் கடை அண்ணாச்சிகடைகளை அவசரமாக கடத்து நேராக ஹரி அண்ணா கடைக்கு காலை டிபன் சாப்பிட சென்றேன். வண்டலூர்  கல்லூரி மாணவர்கள் அதிகம் தங்கும் பகுதி என்பதால், மெஸ்கள் அதிகமாக உண்டு. அதில் நான் கணக்கு வைத்து இருக்கும் கடை மலிவு விலை மெஸ்-ஆன இந்த ஹரி அண்ணா கடை. இங்கு இரண்டு பூரி 15ரூபாய், எனது கல்லூரியில் 40 ரூபாய், இப்படி தான் ஒவ்வொரு உணவிற்கும் வித்தியாசம். இந்த விலை பட்டியலை நினைத்துகொண்டே நான் சாப்பிட்டதற்கு கணக்கு எழுதி விட்டு வேகமாக நடந்தேன். வழியில் எனது நண்பன் காத்துக்கொண்டிருந்தான். அவனும் எம்.இ. படிக்கிறான். எனது கல்லூரியில் இருவரும் வேவ்வேறு துறை. வேகமாக நடந்தோம்,மணி 7:45, நாங்கள் வருகின்ற நேரம் இரண்டு ரயில்கள்(செங்கல்பட்டு-பீச் ரயில்) கடந்து கொண்டு இருந்தது..தண்டவாளத்தை கடப்பதற்கு அங்கு ஒரு கூட்டம் நின்று கொண்டு இருந்தது. அதில் அனைவரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.இரயில் சென்றதும் மின்னல் வேகத்தில் பறந்தார்கள், அவர்களுக்கும் அதே அவசரம் தான் போலும்.

20140228_174739

வேகமாக வண்டலூர் பேருந்து நிலையம் வந்தோம். சாலை முழுவதும் வாகனங்கள் பறக்கின்றன. கல்லூரி,தொழிற்சாலை வாகனங்கள் தான் அதிகம் என்றால் அது மிகையல்ல. ஒரு பக்கம் பேருந்தில் நிரம்பி வழிந்த கூட்டம், இதை பார்த்தபடியே சென்று கொண்டு இருக்கும்போதே ஒருவர் என்மீது மோதினர். நிமிர்ந்து பார்ப்பதற்குள் சாரி பாஸ் என்று கூறியபடியே பேருந்தில் அவசரமாக ஏறினார். பாவம் அவருக்கு என்ன அவசரமோ என்று எனக்குள் சொல்லிக்கொண்டே சாலையைக் கடக்க முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. அது ஒரு தேசிய நெடுஞ்சாலை தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் அந்த வழியாக தான் செல்ல வேண்டும்;மேலும் அந்த நெடுஞ்சாலையில்கல்லூரிகள்,தொழிற்சாலைகள் என்று பஞ்சமே இல்லை. சிகப்பு விளக்கு காட்டிய பிறகு வாகனங்கள் நின்றது. அங்கு ஒரு பெரும் கூட்டம் சாலையை கடந்தது. சென்னையில் சாலையைக் கடக்க மட்டும் தான் ஜாதி,மதம்,மொழி,இனம் பாராமல்அனைத்து மக்களும் ஒன்று கூடுவார்கள். அந்த இடத்தில மட்டும் தான் சமத்துவம் ஓங்கி நிற்கும். ஒரு வழியாக வண்டலூர் பூங்கா முன் நின்றோம். எங்கள் கண்முன்னே எனது கல்லூரி வாகனங்கள் பத்து கடந்து விட்டன, ஆனால் எதுவும் நிற்கவில்லை. வண்டலூரில் என் கல்லூரி மாணவர்கள் அதிகம் பேர் தங்கி உள்ளார்கள். கல்லூரி முதல் ஆண்டு விடுதியில் தங்கிவிட்டு, இரண்டாம் ஆண்டில் வண்டலூர்,பெருங்களத்தூர்,தாம்பரம் என மாணவர்கள் தனியாக வாடகை வீடு எடுத்து தங்கி விடுவார்கள். அதற்குக் காரணம் கல்லூரியின் விடுதியின் கட்டணம் மற்றும் ஒழுக்கற்ற உணவு.

சென்னையில் எல்லா பகுதிகளுக்கும் எனது கல்லூரி வாகனங்கள் செல்லும் சுமார்  நாற்பது பேருந்துகள் உள்ளன.எல்லா பேருந்துகளும் வண்டலூர் வழியாக தான் திரும்பி எனது கல்லூரிக்கு செல்ல வேண்டும். அதனால் வண்டலூரில் இருந்து தனியாக எனது கல்லூரிக்கு பேருந்து கிடையாது. எங்கள் கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கு வண்டலூர் மாணவர்கள் மீது ஒரு தனிப்பட்ட காதல். பேருந்தை நிறுத்தாமல் ஓடவிட்டு வேடிக்கை பார்ப்பது,கைக்காட்டி நிறுத்த சொன்னாலும் பார்க்காமல் வேகமாக ஓட்டுவது என்று ஒரே கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவார்கள். ஏதோ விமானத்தை ஓட்டுவது போல் மனதில் பாவித்து கொள்வார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் நகைச்சுவையின் உச்சகட்டம்.  பேருந்து லோட் தாங்காது என்று கூறுவார்கள்.இவர்களின் இந்த  செய்கைக்கு ஒரே  காரணம் அலட்சியம்,சோம்பேறித்தனம் தான். இதனால் கல்லூரியில் சண்டை வருவது உண்டு. ஆசிரியர்களும் ஓட்டுநர்களை கண்டிக்க தவறியதில்லை. இருந்தாலும் இந்த விடயம் பெரிய பிரச்சினையாக மாறாமல் இருப்பதற்கு காரணம், சில நல்ல ஓட்டுனர்கள் பேருந்தை  நிறுத்தி மாணவர்களை ஏற்றிக்கொண்டு போவார்கள். இன்னொரு காரணம்,அது மூன்று வழி இணையும் பகுதி என்பதால் எப்போதும் ட்ராபிக் இருக்கும். அதனால் சிக்னலில் அனைத்து வண்டிகளும் நிற்கும்.அந்த சமயத்தில் நிற்கும் பேருந்தில் மாணர்வர்கள் ஏறிவிடுவார்கள். ஓட்டுநர்களால் அப்போது ஒன்றும் கூற முடியாது. பல்லைக் கடித்து கொண்டு இருப்பார்கள்.

DSC_0087

அந்த பத்து பேருந்து ஓட்டுநர்களை திட்டிகொண்டே திரும்பும்போது ஒரு பேருந்து வந்து நின்றதும் அதில் ஏறினோம். எனது கல்லூரி வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் போகும் வழியில் ஆறு கிலோமீட்டர்தொலைவில் உள்ள ரத்தினமங்கலம் கிராமத்தில் உள்ளது. வண்டலூரில் இருந்து எனது கல்லூரிக்கு. கொளப்பாக்கம்,ராமானுஜர் பொறியியல் கல்லூரி,வேங்கடமன்கலம் இந்த இடங்களை கடந்து பேருந்து ஒருவழியாக தாகூர் பொறியியல் கல்லூரி வந்து சேர்ந்தது. நான் பில்ட் அப் கொடுத்த எனது கல்லூரி இதுதான். கல்லூரியில் படித்து தான் மாணவர்கள் வளர்வார்கள். இப்பொழுது மாணவர்களை வைத்துதான் கல்லூரிகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. அதன் உதாரணம் தான் எனது கல்லூரி. பொறியியல் கல்லூரியாக 1998-ல் ஆரம்பித்து இன்று பல் மருத்துவம்,மருத்துவம் என அதன் கிளைகளை விரிந்துள்ளது. பேருந்தை விட்டு இறங்கியவுடன் ஷூ போடாமல்,பார்மல்ஸ் ஆடைகளை போடாத மாணவர்களை வளைத்து பிடிக்கும் ஆசிரியர்களை பார்த்துக்கொண்டே வேகமாய் வகுப்புக்கு சென்றோம். நண்பனின் வகுப்பு கீழே உள்ளதால் அவன் விடை பெற்றுகொண்டன்.நான் நான்காவது மாடியில் உள்ள என் வகுப்பை நோக்கி நடந்தேன்.மாணவர்கள் அனைவரும் வேகமாக வகுப்புக்கு சென்று கொண்டு இருந்தார்கள், நானும் எனது வகுப்புக்கு வந்து அடைந்தேன். காலை ஏழு மணியில் இருந்து எட்டு மணிவரை என்ன ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் வாகன புகைகள்,கண் எரிச்சல்,உடம்பு வலி,பதற்றம் என எத்தனை இலவச இணைப்புகள். சென்னை நகரத்தில் வாழும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர்களின் அன்றாட வாழ்கை இதுதான். அதுவும் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி படிப்வர்கள்,வேலை செய்பவர்கள் பாடு மிக மோசம். அனைவருக்கும் ஒரு தனிக்கதை கதை,ஒரு சூழ்நிலை இருந்தாலும் அனைவர்க்கும் சமத்துவமாக இருப்பது வேலை,அவசரம் மற்றும் அதனால் வரும் பாதிப்புகள். இதில் எதைப் பற்றியும் யோசிக்க நேரம் இல்லை. இங்கு இயற்கைச் சூழல் என்பதும் இயற்கை காற்று என்பதும் கிடையாது. மாசு காற்றும், கண் எரிச்சலும், வியாதியும் தான் கிடைக்கும்.மேலும் எல்லாம் வேகம் தான். ஒரு வாரம் எப்படி ஓடும் என்பதே தெரியாது. ஞாயிறு கண்மூடி திறந்தால் மறுபடி அடுத்தவாரம் ஓட வேண்டும். ஆனால் வேறு வழி இல்லை இப்படி தான் வாழ்ந்து ஆக வேண்டும். என் மனதிற்குள் இப்படி நினைவுகள் ஓடி கொண்டிருக்க ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்,

இந்த கல்விமுறையில் சுத்தமாக ஆர்வம் இல்லை. எம்.இ முடிக்க வேண்டுமே என்பதற்காக படித்து கொண்டு இருக்கிறேன். இந்த கல்வி முறை மனிதனை தனது சுயநலத்திற்காக மட்டுமே சிந்திக்க வைக்கிறது. நான் இப்படி பேசுவதற்கு என்னை சிந்திக்க வைத்தது  நான் என்வாழ்வில் மேற்கொண்ட சில பயணங்கள்,அதில் கிடைத்த நட்பு வட்டாரங்கள்,அங்கு நான் பார்த்த சில நிகழ்வுகள் இப்படி சொல்லிக் கொண்டு போகலாம். காலை இடைவேளை வந்தது வழக்கம் போல் புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினேன். புத்தகம் படிப்பது எனது அலாதி விருப்பம் ஆனால் எனது கல்வி புத்தகம் இல்லை, சமூக மாற்றத்திற்கான புத்தகம். ஒவ்வொரு புத்தகம் படிக்கும் பொழுதும் மாற்றம் ஏற்படும்; ஒரு சரியன வழியை அது காட்டும்;அதுவே எனது ஆசிரியர்,நண்பன். மதிய இடைவேளை வரை ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. எம்.இ என்பதால் அப்படித்தான். வகுப்பு நண்பர்களுடன் சாப்பிட சென்றேன். இரண்டு மாதத்திற்கு முன்பு வந்த அர்ச்சனா உணவகத்தில் அதிக விலை. எல்லாம் கல்லூரி நிர்வாகத்தின் அரசியல். அவர்களுக்கு என்ன லாபமோ!… மதிய உணவை முடித்துவிட்டு வகுப்புக்கு கிளம்பினோம். மீண்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்தேன் ஆசிரியர் வரும் வரை. ஒரு வழியாக வகுப்புகள் முடிந்தன. மணி மூன்று!..அனைவருக்கும் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதி இல்லை,எம்.இ மாணவர்களை மட்டும் வெளியே விடுவார்கள். 3.25க்கு தான் பி.இ மாணவர்களை வெளியே விடுவார்கள். கல்லூரியை விட்டு வெளியே வந்தேன். சாலையை கடந்து பேருந்து நிறுத்தும் இடத்தை கடந்து ஒரு வளைவில் திரும்பினேன். அந்த தெருவில் நுழைந்தவுடன் ஒரு அரசு பள்ளி, அதில் விளையாடி கொண்டிருக்கும் மாணவர்கள்,பஞ்சாயத்து கட்டிடம்,குடிசை வீடுகள்,சாலையில் அமர்ந்து பேசிகொண்டிருக்கும் பாட்டிகள்,வீட்டிற்கு வெளியே துணி துவைத்து கொண்டிருக்கும் பெண்கள்,ஆடு,நாய் சுற்றி திரியும் படியானஒரு கிராமத்து சூழல், அமைதியான இடம். ஆம்! இரத்தினமங்கலம் என்கிற ஒரு கிராமம். இப்பொழுது இங்கு இருந்து சற்று உள்ளே உள்ள நல்லம்பாக்கம் கிராமத்திற்கு சென்று கொண்டு இருக்கிறேன்.நான் ஏன் அங்கு செல்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு மாதத்திற்கு பின் செல்வோம்.

20140301_124419

மாணவர்களின் எதிர்காலம் கருதி நல்லம்பாக்கம் ஆசிரியை திருமதி.கிருஷ்ணவேணி அவர்கள் முக புத்தகத்தில் அந்த பள்ளியின் பெயரில் ஒரு பக்கத்தை உருவாக்கினார். அதில் மாணவர்களின் திறமைகளை பதிவு செய்வார். ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் மாணவர்களின் திறமைகளை முக புத்தகம் மூலம் உலகறியச் செய்தார். அங்கு வேலைப் பார்க்கும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் திறமைகளை வெளியே கொண்டுவர தங்கள் உழைப்பினை செலுத்துகின்றனர் என்பதை அங்கு நேரில் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது. இங்கு என்னை அறிமுகபடுத்தியது முக புத்தகம்தான். ஒரு மாதத்திற்கு முன்பு முக புத்தகத்தில்  அந்த பள்ளியின் பக்கம் எனது கண்ணில்பட்டது. உடனே அந்த ஆசிரியைக்கு குழந்தைகளுக்கு நானும் பாடம் எடுத்து உதவுகிறேன் என்று மின் அஞ்சல் அனுப்பினேன்.. எனது கோரிக்கையை மதித்து குழந்தைகள் தின விழாவிற்கு அழைப்பு விடுத்தார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது அவர்கள் குழந்தைகளுக்கு கணினி வகுப்பு எடுக்குமாறு கூறினார்கள். அன்று முதல் கல்லூரியில் இருந்து அரைமணிநேரம் முன்பே கிளம்பி விடுவேன். அங்கு நடந்தது செல்ல அரைமணிநேரம் ஆகும். நாற்பது நிமிடங்கள் வகுப்பு எடுப்பேன். கணினி,தொழில்நுட்பம்,இயற்கை,மலை,பறவை,சுரண்டல் போன்று பல வகுப்புகள் எடுப்பேன். இந்த பயணம்தான் என்னை எழுத வைத்தது. பல விடயங்களை எனக்கு புரிய வைத்தது. இந்த பயணம்தான் காலையில் நிம்மதி இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் மக்களையும்,மாலையில் அமைதியாக வாழும் மக்களையும் ஒரே நாளில் பார்க்க வைத்தது. இந்த பயணம்தான் சென்னை நகர மக்களின் வளர்ச்சியையும் அதனை சுற்றி உள்ள கிராம மக்களின் வீழ்ச்சியையும் ஒன்றாக பார்க்க வைத்தது, இந்த பயணம்தான் மக்களின் வாழ்கை நிலையை புரிய வைத்தது. இந்த பயணம்தான் சென்னையை சுற்றியுள்ள கிராமங்களின் சுரண்டல் தான் நகரத்தின் வளர்ச்சி என்பதை புரியவைத்தது.

சரி! நான் வந்த கதையை சொல்லிவிட்டேன். வாருங்கள் பயணத்தை தொடருவோம்…இரத்தினமங்கலம் இயற்கைச்சூழலைக் கடந்தபின்பு ஒரு வளைவு, அந்த வளைவில் திரும்பினால் ஒரு அழகிய சிறிய மலை, அந்த மலையின் நீளம் தொடர்ந்து கொண்டே போகிறது… செடிகளுக்கு நடுவே புகுந்துகொண்டு சென்றேன். நீண்ட தூரத்தில் மரங்கள் அடர்த்தியாக இருந்தது. திரும்பிய பக்கம் எல்லாம் இயற்கை காட்சி. இரத்தினமங்கலம் மற்றும் நல்லம்பாக்கம் நடுவே மூன்று கிலோமீட்டர் முழுக்க காடுதான். அதை கடந்துதான் நல்லம்பாக்கம் செல்ல வேண்டும். அந்த காட்டில் இருந்த காட்சிகள் தான் மேலே சொன்னவை. இப்பொழுது அந்த மரங்களுக்கு நடுவே சென்றன் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த காட்டில் தனியாக செல்வது என்ன ஒரு சுகம். காற்றில் அசைகின்ற அந்த மரங்கள் தங்களுக்குள் ஏதோ பேசிகொண்டிருப்பது போல் தோன்றும். அந்த மரங்களை கடந்து சென்றால் ஒரு கட்டிடம் அழகிய காட்டில் அபாய ஒலியை ஏற்படுத்தி கொண்டிருக்கும். இதைப் பற்றி பின்பு கூறுகிறேன். அந்த கட்டிடத்தை கடந்த உடன் மீண்டும் மரங்கள். அந்த மரஙகளை கடந்து சென்றால் ஒரு பரந்த புல் மைதானம்.ஆடு, மாடு புல்களை மேய்ந்து கொண்டு இருக்க, பறவைகள் சத்தம் காதுகளில் இசையாய் பாட!!! அடடா!!!! அந்த இயற்கை மீதான காதல் அதிகமாகிறது,நகர வாழ்கையில் இதனை இழந்துவிட்டோம் என்று புரிந்தது. காலை கல்லூரிக்கு வந்ததை நினைத்து பார்த்தேன் ஐயோ…. வாகன சத்தம் கேட்ட காதில் பறவைகளின் பாட்டு கச்சேரி, தூசு காற்றை சுவாசித்த எனக்கு இயற்கை காற்று. ஆகா! என்ன ஒரு ஆனந்தம். பாடிய பறவைகள் பக்கத்தில் உள்ள சிறிய ஏரிக்கு சென்று தண்ணீர் குடிக்கும் அழகை பார்த்துக்கொண்டே நகர்ந்தேன். மலை,மரம்,ஏரி,பறவை,மாடு,ஆடுஇவை அனைத்தையும் ஒன்றாக பார்த்த மகிழ்ச்சியில் அங்கு இருந்து சென்றேன்.வழியில் ஒரு சிறிய மலை ஒருமாதமாக அங்கு இருக்கும் கோவிலுக்கு செல்ல ஆசை ஆனால் தள்ளிக் கொண்டே போனது. அதை பார்த்துக் கொண்டே நகர்ந்தேன்.மூன்று கிலோமீட்டர் கடந்து வந்த சுமை தெரியவில்லை. இப்பொழுது நான் நிற்கும் இடம் நல்லம்பாக்கம் கிராமம்.

20140327_164813

இரத்தினமங்கலம் அடுத்து நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், அம்மனம்பாக்கம், குமுழி போன்ற கிராமங்கள் உள்ளது(இன்னும் நிறைய உள்ளது). ஒரு பெரிய பூதம் சென்னை நகரத்தை முதலில் அழித்தது. பின்பு அதனை சுற்றி உள்ள இடங்களை அழித்தது. அப்போது வண்டலூர்-செங்கல்பட்டு வழியில் மலைகள் இருப்பதை கண்டது, அந்த மலைகளை அழித்தது. அந்த பூதம் இப்படி இயற்கை வளங்களை அழித்து நகரம் ஆக்கியது. அந்த பூதத்தின் பெயர் கார்ப்பரேட் நிறுவனம். செங்கல்பட்டு-வண்டலூர் வழியாக வந்தால் நீங்கள் பார்க்கலாம்,அந்த பகுதி ஒரு மேடாக இருக்கும். அங்கு உள்ள கிரமங்களில் பயணம் செய்தால் மலைகள் அதிகம் இருக்கும் ஆனால்கொலைசெய்யப்பட்ட நிலையில். அதில் ஒரு சிறிய கிராமம் தான் இந்த நல்லம்பாக்கம். இங்கு விவசாயம் இல்லை. ஒரு ஐந்து குடும்பங்கள் மட்டும் விவசாயம் செய்வார்கள். அதிக மக்கள் கல் குவாரியில் கூலி வேலை செய்பவார்கள். அங்கு உள்ள பெண்கள் தோல் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள். காட்டில் ஒரு கட்டிடம் அபாய ஒலி எழுப்பும் என்று கூறினேன் அல்லவே அந்த கட்டிடம் தான் அந்த தொழில்சாலை. அந்த கழிவுகள் எல்லாம் அந்த அழகிய ஏரியில் தான் கலக்கின்றன. இயற்கை இருக்கும் இடத்தை சுரண்டி வியாபாரம் பார்ப்பது கார்ப்பரேட் நிறுவனம். “உங்கள் நலனுக்காக தான் செய்கிறோம்” என்று படித்த முட்டாள்களிடம் கண்ணனுக்கு இன்பம் தரும் விளம்பரம் வைத்து தவறான விழிப்புணர்வு ஏற்படுத்த தவறியதில்லை இவர்கள். இங்கு இருக்கும் மக்களை விழிப்புணர்வு ஏற்படாமல் தடுக்க இவர்களின் ஆயுதம் அரசாங்கம் உதவியுடன் நடக்கும் மதுக் கடைகள். இது தான் அந்த கிராமத்தின் சிறிய வரலாறு.

ஊருக்குள் சென்றேன் அதே கிராமத்துச் சூழல். இவர்களை எல்லாம் கடந்து ஒரு தெருவை திரும்ப நெருங்கியபோது அந்த இடத்தில் இருந்து சத்தம் கேட்க ஆரம்பமானது. குழந்தைகளின் சத்தம் தான் அது! அந்த தெருவை திரும்பயடன் எனது கண் முன் “நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளி”. பள்ளிக்குள் சென்றவுடன் குட்டிக் குழந்தைகள் என்னை வரவேற்க, ஆனந்தமாய் தலைமை ஆசிரியர் இருக்கும் வகுப்புக்கு சென்றேன். அங்கே தான் ஆறாம்,ஏழாம்,எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு தான் நான் பாடம் எடுக்க வேண்டும். நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளில் சிலரை தேர்ந்து எடுத்து இந்த வகுப்புக்கு அனுப்புவார்கள். அவர்களை வைத்து இனி வரும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தான் இந்த ஏற்பாடு. எனது வருகையைப் பார்த்து மாணவர்கள் அன்போடு வரவேற்க “வாங்க அண்ணா…வாங்க அண்ணா” என்று எட்டாம் வகுப்பிற்குள் நுழைந்தேன். எல்லா வகுப்பு மாணவர்களும் பத்து நிமிடத்தில் அங்கு வந்தார்கள் அனைவரின் கண்களிலும் புதிதாக கற்றுக்கொள்ளப் போகிறோம் என்ற ஆர்வம்.

DSC_0333

ஒரு மாதமாக அவர்களுக்கு கணினி மட்டும் எடுக்க வில்லை சமூக விழிப்புணர்வையும் சேர்த்து எடுத்து கொண்டிருந்தேன். நான் முதலில் பாடம் எடுக்கும் போது அவர்களுக்கு எடுத்தது சே-குவேரா வாழ்க்கை வரலாறு தான். அந்த மாமனிதரை வைத்து இவர்களுக்கு நான் கூறியது 1.எவ்வளவு பெரிய படிப்பு படித்தாலும் சக மனிதனை மதிக்க வேண்டும் 2.மனித உழைப்பு வேண்டும். எல்லா வேலைகளையும் வேறுபாடு இன்றி பார்க்க வேண்டும் 3.அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். இந்த விடயத்தை தான் அவர் கடைபிடித்தார் என அவர்களுக்கு எப்பொழுதும் சொல்லி கொண்டேயிருப்பேன். இன்று கணினி ஒரு பகுதியை முடித்துவிட்டு சமூக விழிப்புணர்வு நேரம் வந்தது, இன்றைய விழிப்புணர்வு மலைகளைப் பற்றி தான். அந்த மலையை அழிப்பது நமது வரலாற்றை நாமே அழிப்பது என்பதை எடுத்துக்காட்டுடன் கூறினேன். அந்த மலைகளைக் காக்க “பசுமைநடை குழு” செயல்படுகிறது. அதில் ஒரு தன்னார்வளராக நானும் உள்ளேன் என்பதை தெரிவித்தேன். அதை ஆர்வமுடன் கேட்ட குழந்தைகள் அந்த குழு எங்கே உள்ளது அண்ணா என்று கேட்டார்கள். மதுரையில் உள்ளது என்று கூறினேன். நாங்கள் வரலாமா  என்று அவர்கள் கேட்க அதற்கு நான் இயற்கையும், வரலாறும் பாதுகாப்பதே பசுமைநடையின் வேலை. உங்களது வரலாற்றையும் சுற்றி உள்ள இயற்கையும் தெரிந்துகொள்ளுங்கள்,நேசியுங்கள்.உங்களது காலம் வரும்போது வாருங்கள் எனக் கூறினேன். அந்த கிராமம் முழுவதும் கல் குவாரி உள்ள பகுதி சுரண்டுவது மலைகளை  மட்டும் இல்லை நம்மையும் தான் என்று அவர்களுக்கு புரியவைப்பதற்கே பசுமைநடையைப் பற்றி கூறினேன். அவர்களும் அதை புரிந்து கொண்டார்கள். பின்பு வழக்கம் போல் ஒரு தத்துவத்தை அவர்களது மட்ட பலகையில் எழுதினேன் இன்றைய தத்துவம் “என்றும் நினைவில் கொள் மனிதனாக பிறந்தால் பயனின்றி அழியகூடாது-கார்ல்மார்க்ஸ்”. இப்பொது நேரம் நான்கு பத்து…. மணி அடித்தஉடன் தேசியகீதப் பாடலைப் பாடிவிட்டு அனைவரும் கலைந்தார்கள்.

20140228_163045

தினமும் பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியரின் இருசக்கர வாகனத்தில் வண்டலூர் வரை வருவேன். இன்று அவர் விடுமுறை நடந்துதான்  செல்லவேண்டும். அப்போது வழியில் உள்ள அந்த குட்டி மலையில் உள்ள சிவன் கோவில் பார்க்க வேண்டும் என்று ஒரு யோசனை தோன்றியது. அங்கு உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு சென்றேன். அதில் ஒரு மாணவன் பெயர் விக்னேஷ். அவனுக்கும் இந்த மலைக்கும் ஒரு தொடர்பு உண்டு. அந்த மலை கல் குவாரியால் சிதைக்கபட்டபோது. விக்னேஷின் தம்பி அந்த மலையில் விளையாட சென்றுதவறி விழுந்து பாறையில் அடிபட்டு இறந்துவிட்டான். இந்த கதையை கூறியது அந்த பள்ளி மாணவர்கள்.

பாவம் இன்னும் எத்தனை குழந்தைகளின் உயிர்களோ இந்த குவாரியின் லாப வெறியால் இழக்க போகிறோம். இப்போது விழுந்தால் அடிபடும் அளவிற்கு அங்கு உள்ள மலையில் பாறைகள் இல்லை, அந்த அளவிற்கு பெரிய மலையும் இல்லை அது, அப்படி அந்த மலைகளை மாற்றியது இந்த முதலளித்துவ முதலாளிகள் தான். இதை என் மனதிற்குள் நினைத்துகொண்டு அந்த மலையில் ஏறினேன். மாலை நேரம் சூரியன் மறைந்து கொண்டு இருக்க காற்று வீச, நான் வழியில் கண்ட இயற்கை காட்சிகள் அனைத்தும் மேல் இருந்து பார்த்து ரசித்தேன். அதே நேரத்தில் இயற்கையை அழிக்கும் காட்சிகளையும் கண்டேன. குவாரி,கட்டிடம், தொழிற்சாலை என அனைத்து பூதங்களும் விரைவில் வருகிறோம் என்று கூறியபடியே நல்லம்பாக்கம் கிராமத்தைப் பார்த்துக் கொண்டுஇருந்தன. . அந்த பூதங்களை அந்த மாணவர்களு காண்பித்து மீண்டும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.பின்பு மலையை விட்டு கீழே இறங்கினோம் அவர்கள் கிராமத்தை நோக்கி நடக்க நான் நகரம்(நரகம்) நோக்கி நடந்தேன்.  அன்றைய எனது ஒரு நாள் பயணம் முடிந்தது. வீட்டிற்கு வந்து நடந்ததை நினைத்துகொண்டே படுத்து உறங்கினேன்.

மறுநாள் கல்லூரியில் எனது ஒரு மாத பயணம் பற்றி மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் கூறினேன்.அனைவரும் ஒன்று கூடினோம்.அனைவர்க்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து தினமும் ஒரு குழு போய் அங்கு இருக்கும் பள்ளிகளில் வகுப்பு எடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். பாடத்திட்டத்தை கற்றுக்கொடுக்க பள்ளிக்கூடம் இருக்கு, ஆகையால் அறியாத உண்மைகளை அவர்களுக்கு அறிமுகப் படுத்தவேண்டும் என்பது எங்களது இலக்கு. இப்படி நாங்கள் செய்வதனால் அந்த மாணவர்கள் வருங்காலத்தில் விழிப்புணர்வோடு இருப்பார்கள் என்பது எங்களின் அசைக்கமுடியாத உண்மை. நாங்கள்  இந்த கல்வி முறையால் இயற்கையும், வரலாற்றையும் மறந்தோம். ஆடம்பர வாழ்கை மீது காதலும் மேலாதிக்க கலாச்சாரம் மீது மோகமும் கொண்டோம். வளர்ச்சி என்ற பெயரில்கொள்ளைஅடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஊழியனாக இருக்கிறோம். எங்களை சுற்றி நடக்கும் சுரண்டல்களை கண்களில் இருந்து மறைத்தது இந்த கல்வி. அறிவை வளர்க்க நாங்கள் படிக்கவில்லை. பணம் சம்பாதிக்க மட்டுமே கல்வி என்பதை புரிந்துகொண்டோம். அதில் அந்த மாணவர்களும் சிக்கக் கூடாது என்பதற்காக அணிதிரண்டு எதிர்கால இளைஞர்களை உருவாக்க விதைகளை விதைக்கிறோம். எங்களுடன் ஆசிரியர்களும் துணை நிற்கிறார்கள்……………….சட்டேன்று முகத்தில் தண்ணீர் டேய் எழுந்துரு டா………என்ன பகல் கனவா மணி ஆகிடுச்சு கெளம்பு என்றான் எனது நண்பன் அருள்………எல்லாம் கனவா என்று நினைத்துகொண்டு எனது பயணத்திற்கு தயாராகினேன். இன்றைக்கு மாணவர்களுக்கு என்ன பாடம் எடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டு. அதுசரி விழிப்புணர்வு,  எல்லாம் கனவில் தான் நடக்கும் என்பது புரிந்தது……………………………பயணம் தொடரும்………………

20140301_130450 20140301_135417 DSC_0326