மலை உச்சியில் இருந்து ஆற்றை பார்த்தது மனதிற்கு அமைதியான மகிழ்ச்சியை தந்தது மற்றும் ஆறுகளை சுற்றி உள்ள நிலங்களும் அந்த நிலத்தை சார்ந்து வாழும் மக்களின் சமூகஅமைப்பும், வரலாறும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆறுகள், மலைகள் இருக்கும் இடத்தில் நிச்சயமாக நிலங்களும் அந்த நிலங்களை தனது பிடியில் வைக்க கோவில்களும் இருக்கும் என்பதையும், அந்த நிலத்தை சார்ந்த உழைக்கும் வர்க்க மக்களும் ஆளும் வர்க்க மக்களும் ஒரு சமூகமாக அதில் பல சாதியால் பிரிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என புத்தகத்தில் படித்த அனைத்தும் என் கண் முன் வந்து நின்றது. என் மனதில் தோன்றிய எண்ணங்களை போன்றே நூற்று ஐம்பது மக்களின் பல்வேறு எண்ணங்களும் அந்த மலை உச்சியில் அலைமோதி கொண்டு இருந்தன, குழுவில் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் எண்ணங்களையும் மகிழ்ச்சிகளையும் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு இருந்தனர். சரி எந்த மலையின் உச்சியில் இருந்து எந்த ஆற்றை பார்த்து கொண்டு இருக்கிறேன்??எந்த குழுவுடன் நின்று கொண்டு இருக்கிறேன்?? இன்று இங்கு நான் தெரிந்துகொண்ட தகவல் என்ன?? இந்த அத்தனை கேள்விகளுக்கு பதில் தெரிய அரைமணி நேரம் முன் இந்த மலையில் நடந்த நிகழ்வுகள் உங்களுக்கு தெரியபடுத்த வேண்டும். அரைமணி நேரம் பின்நோக்கி உங்களை அழைத்து செல்கிறேன் என்ன நடந்தது என்பதை தெரிய படுத்த.
அரைமணிநேரம் முன்பு:
நின்று கொண்டு இருந்த மலை உச்சியில் இருந்து இரண்டு நிமிடம் கிழே இறங்கினால் ஒரு பெரிய பாறையில் கல்வெட்டுகளும் பாறைக்கு நடுவில் ஒரு குகை பக்கத்தில் மலையின் மீது ஏறி வந்த களைப்பில் மக்கள் அனைவரும் அமர்ந்தார்கள், ஒருங்கினைபாளர்கள் அனைவரும் மக்களுக்கு பிஸ்கட் விநியோகிக்க பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக கவனம் செலுத்த பட்டது. இரண்டாயிரம் வருடத்திற்கு பின் உள்ள வரலாற்றுக்கு செல்ல மக்களை தயார் படுத்தி கொண்டு இருந்தார்கள் ஒருங்கினைபாளர்கள், தனது வார்த்தைகளால் வரலாற்று பயணத்தை அனைவரையும் அழைத்து செல்ல ஆசிரியர்கள் தயாரானார்கள். மெல்ல மக்களின் பேச்சு சத்தமும் அலைபேசி சத்தங்களும் குறைந்து காற்றின் சத்தமும் பறவைகளின் சத்தமும் கேட்ட தொடங்கின. இப்பொது நான் அமர்ந்து கொண்டு இருக்கும் குகைதளத்தில் 11 கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொரு படுக்கையிலும் தலையனை போன்ற பகுதியில் தமிழ்பிராமிக் கல்வெட்டு உள்ளது. இப்பெயர்கள் அனைத்தும் இதை செதுக்கி தந்தவர்களின் பெயராகவோ அல்லது இப்படுகைகள் இப்பெயர்களுக்கு உரியது என்றோ இருக்கலாம்.
தொல்காப்பியம் வருவதற்கு முன்பு வரை ச என்ற சொல் வராது என்பதை உறுதி செய்யும் வகையில் அங்கு இருந்த ஒரு கல்வெட்டு சான்றாக இருந்தது “அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ”. இதில் அமணன் என்ற சொல் சமணன் என்பதாகும், மதிரை என்பது மதுரை என்பதாகும். இந்த தகல்வல்கள் அனைத்தும் வரலாற்று ஆசிரியரிடம் இருந்து அங்கு கற்று கொண்டது. இந்த வாக்கியம் நான் எங்கு இருக்கிறேன் என்பதை தெரியபடுத்தும், ஆம் மதுரைக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் பேரனைப் பகுதியில் மேட்டுப்பட்டி அமைந்துள்ளது. அணைப்பட்டி என்னும் சிற்றூர் அருகில் வைகையாற்றின் தென்கரையில் மகாலிங்கமலை என்றழைக்கப்படும் சித்தர்மலையின் மேல் அமர்ந்து கொண்டு மலையின் வரலாற்று தகல்வல்களை கேட்டு கொண்டு இருக்கின்றேன், மலை உச்சியில் நான் ரசித்துக்கொண்டு இருந்த ஆறு வைகை ஆறுதான். காலையில் உற்சாகமாக மலைகள் மீது மக்களை தனது கைகளில் கோர்த்து பத்திரமாக அழைத்துக்கொண்டு வரலாற்று பாடத்தை அவர்களுக்கு கற்றுகொடுத்து ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்ற பசுமைநடை குடும்பத்தில் தான் ஒருவனாக அமர்ந்து கொண்டு இருக்கின்றேன். அனைவருக்கும் வரலாற்று பாடத்தை எடுத்தது சாந்தலிங்கம் அய்யா அவர்கள். மேலும் அய்யா கூறிய தகவல்கள் “இந்த மலை மீது உள்ள மகாலிங்கம் கோவில், நந்திப்பாறை ஏழாம் சமகாலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம். பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்குமான பெருவழியில் இப்பகுதி முன்பு அமைந்திருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதை முன்பிருந்தது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அகஸ்டஸ் சீசர் காலத்திய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளது”. இந்த தகவல்கள் அனைத்தும் சங்க கால சமூக அமைப்பும் வணிக முறையும் தெரிந்து கொள்ள தூண்களாக உள்ளது.
அடுத்து பசுமைநடையின் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது சங்க காலத்தில் ஒரு சாமான்ய ஏழை உழைப்பாளியின் உழைப்பில் உருவான, மக்களின் நம்பிக்கை சின்னமாக மாறிய, கலையின் உருவமாய் உள்ள தெய்வ சிலைகள் இன்று மக்களுக்கு வரலாறு மற்றும் கலைகளின் மீது விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பண்ட பொருளாக மாறி அந்த சிலைகளை(கலைகளை) இங்கு இருந்து கடத்தி சென்று மேலைநாடுகள் ஒரு சூதாட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றன. அதனை எதிர்த்து குரல் கொடுத்து களத்தில் போராடி தனது இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் விஜயகுமார் அய்யா (www.poetryinstone.com)அவர்கள் சிறப்பு விருந்தினராக பசுமை நடையில் கலந்துகொண்டு தனது அனுபவங்களை பசுமைநடை குடும்பத்தில் பகிர்ந்துகொண்டார். கலை, வரலாறு, இயற்கை பற்றிய அவசியத்தை அதற்கான இடத்திலேயே மக்களை அழைத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பசுமைநடைக்கு அவரின் வருகை உற்சாகம் அளித்தது. அவருக்கு பசுமைநடை மதுர வரலாறு புத்தகமும் நினைவுபரிசும் காற்றின் சிற்பங்கள் புத்தகமும் கொடுத்து சிறப்பித்தது. அரைமணிநேரம் முன் நான் பசுமைநடை குடும்பத்தில் கற்றுக்கொண்ட விடயங்களையும் அனுபவங்களையும் கூறிவிட்டேன். எப்படி இந்த மலையில் நாங்கள் அனைவரும் ஏறினோம்?? எங்கிருந்து பயணத்தை தொடங்கினோம்??? இதனை தெரிந்துகொள்ள மூன்றுமணி நேரம் உங்களை பின்னோக்கி அழைத்து செல்கிறேன்.
மூன்று மணிநேரத்திற்கு முன்பு:
அதிகாலை ஐந்து மணிக்கு மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்தில் இறங்கி தேநீர் குடித்துகொண்டே ஆகாயத்தை பார்த்தபொழுது இரவிற்கே சொந்தமான கருமை நிறம் போர்த்தி இருந்தது. அங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் சென்று பின்பு மதுரை காமராஜர் பல்கலைகழகம் செல்ல பேருந்து ஏறி பல்கலைகழகத்தில் இறங்கி மீண்டும் ஆகாயத்தை பார்த்தேன் இருள் போர்வை விலகி மலைகளுக்கு நடுவில் நமது முன்னோரான கதிரவன் தனது தலையை மெதுவாக உயர்த்தி கொண்டு இருந்தார். சென்னையில் இருந்து மதுரை வந்த களைப்பு பறந்தது பசுமைநடை குடும்ப நபர்கள் வருவதை பார்த்து, பின்பு அவர்களுடன் மீண்டும் தேநீர் குடித்துவிட்டு திரும்பி பார்த்தபோது பசுமைநடை குடும்ப நண்பர்கள் அனைவரும் தனது வாகனத்தில் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பயணத்திற்கு தயாராக்கிக்கொண்டு இருந்தார்கள் முத்துகிருஷ்ணன் அய்யாவும் ஒருங்கினைப்பாளர்களும். பசுமைநடை படை சித்தர் மலை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. பல கிராமங்கள் மலைகள் வயல்கள் அந்த கிராமத்து மக்கள் அவர்கள் அன்றாட வாழ்வு அனைத்தையும் பார்த்தபடியே மலை அடிவாரத்தை அடைந்தோம். பின்பு வரிசையாக மலைமீது ஏற தொடங்கினோம். ஒருங்கினைபாளர்கள் அனைவரும் மக்கள் ஏறுவதற்கு முன்பே மலைமீது ஏறி மக்களை பாதுகாப்பாக கொண்டு சென்றனர். வழுகை பாறை மீது சிறியதாக செதுக்கப்பட்ட படிகளை செதுக்கிய உழைப்பாளியை நினைத்துகொண்டே மலைமீது ஏறி குகை அருகில் அமர்துகொண்டு இருந்த மக்களின் நடுவில் அமர்தேன்.
இப்பொது
காலையில் இருந்து இப்பொது வரை பசுமைநடை குடும்பத்தின் மூலம் எனக்கு கிடைத்த வரலாற்று தகல்வல்கள் அனுபவங்கள் உணர்வுகள் அனைத்தையும் நினைத்துகொண்டு வைகை ஆற்றை பார்த்துகொண்டு இருக்கும்போது கரும்பைபோல் ஒரு இனிப்பான செய்தி வந்தது…..நமது பசுமைநடை குடும்பம் பொங்கல் கொண்டாட போகின்றது மக்களோடு இணைந்து என்பதுதான் அது…இப்பொது அனைவரின் நினைவுகளும் அடுத்த பசுமைநடை தேதி நோக்கி காத்துகொண்டு இருந்தன……பசுமைநடை பயணம் தொடரும்…………..
புகைப்படங்களுக்கு நன்றி : அருண் அவர்களுக்கு
கட்டுரை வித்தியாசமான கோணத்தில் படம் எடுப்பதை போல் வரலாற்றை தெரிந்து கொள்ளமுடிந்தத.
LikeLiked by 1 person
அருமை தம்பி…
LikeLiked by 1 person
சித்தர்மலை பசுமைநடை குறித்து புதுமையான கோணத்தில் மிக அருமையாக எழுதப்பட்ட பதிவு. ஒரு சின்ன திருத்தம் மட்டும் கீழ் உள்ள வரியில்
\\தொல்காப்பியம் வருவதற்கு முன்பு வரை ச என்ற சொல் வராது என்பதை உறுதி செய்யும் வகையில் அங்கு இருந்த ஒரு கல்வெட்டு சான்றாக இருந்தது\\ தொல்காப்பியத்தில்தான் மொழிக்கு முதல் எழுத்தாக ச வராது என்று இருக்கிறது. அதை மட்டும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவும்.
நல்ல பதிவு தோழா! தொடர்ந்து எழுதவும்!
LikeLiked by 1 person